மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் சொந்தமான சொத்துக்களை, அரசு உரிய முறையில் பராமரிக்காததால், கோவில் சொத்துகள் பாழாகி வருவது பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு, மன்னர்கள் காலம் முதல் பலரும் நிலங்களைத் தானமாக வழங்கி வந்தனர். கோவிலுக்குச் சொந்தமாக மதுரை, இராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் உள்ளன.
குத்தகைக்கு விடப்பட்ட கோவில் நிலங்கள் குறித்து அரசு கண்டு கொள்ளாததால், கோவில் நிலங்களில் குத்தகைக்கு வசித்தவர்கள் நாளடைவில் ஆக்கிரமித்து உரிமையாளர்களாக மாறினர். அந்த நிலங்களை மீட்டு கோவில் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர அறநிலையத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. மீட்ட இடங்களில், இது மீனாட்சி கோயில் சொத்து என அறிவிப்பு பலகையும் வைத்து வருகிறது.
அதேநேரம் மீட்கப்பட்ட சொத்துகள் பராமரிப்பின்றி பாழடைந்து வருகின்றன. உதாரணமாக, பெரும் சட்ட போராட்டத்திற்குப் பிறகு மதுரை மீனாட்சி டாக்கீஸ் தியேட்டர் இருக்கும் இடத்தை மீட்ட கோவில் நிர்வாகம், பயனற்ற நிலையில் பராமரிப்பின்றி, பல ஆண்டுகளாக வைத்திருக்கிறது. கட்டடத்தைத் திருமண மண்டபமாக மாற்றி வருவாய் ஈட்டலாம்.
இது நகரின் முக்கிய பகுதியில் உள்ளதால், கோவில் நிர்வாகத்திற்கு நல்ல வருமானம் கிடைக்கும்.
இதேபோல், மதுரை டி.பி. சாலையில் இரயில்வே காலணி எதிரே கோவிலின் கல் மண்டபம் உள்ளது. இந்த இடத்தை மீட்ட கோவில் நிர்வாகம் எந்தவொரு பராமரிப்பின்றி வைத்துள்ளது. இதன் அருகில் இரயில்வே நிலையம் இருப்பதால், கோவிலுக்கு வரும் பக்தர்களுக்குப் பயனுள்ள வகையில் மாற்றலாம்.
இதுபோன்று கோவிலுக்கு வருமானம் தரக்கூடிய சொத்துகள், பராமரிப்பின்றி பாழாகி வருவது பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.