அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை நவம்பர் 6-ந்தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஜூன் 13ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு, தலைமைச் செயலகத்திலுள்ள அவரது அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.
இதனைத்தொடர்ந்து சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின்படி அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர்.
பின்னர் அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமின் மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இரு முறை தள்ளுபடி செய்துள்ளது.
இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. இதனையடுத்து ஜாமின் கோரி அவர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைவதை தொடர்ந்து அவர் வீடியோ கான்பரன்சிங் மூலம் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது நீதிபதி அவரின் நீதிமன்ற காவலை நவம்பர் 6-ந்தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார். செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 9 முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.