சனாதன தர்மத்தை தி.மு.க.வினர் தொடர்ந்து இழிவுபடுத்தினால் ஆட்சிக் கலைக்கப் போராடுவேன் என்று பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கடந்த மாதம் பேசிய வீடியோவை, தற்போது ரீட்வீட் செய்திருப்பது தி.மு.க. வட்டாரத்தில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
தி.மு.க. தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலினின் மகனும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், சென்னையில் நடந்த இடதுசாரி அமைப்பின் மாநாட்டில் கலந்துகொண்டு பேசும்போது, சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று கூறினார். இவரது பேச்சு ஹிந்துக்கள் மற்றும் ஹிந்து அமைப்புகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, உதயநிதி ஸ்டாலின் மீது பல்வேறு காவல்நிலையங்களில் புகார் செய்யப்பட்டது. மேலும், அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. அதோடு, உதயநிதி மீது நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு முக்கியப் பிரமுகர்கள் பலரும் கடிதம் எழுதினர்.
எல்லாவற்றுக்கும் மேலாக, உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சாமியார் ஒருவர் உதயநிதியின் தலைக்கு 10 கோடி ரூபாய் பரிசு அறிவித்த நிகழ்வும் அரங்கேறியது. இந்த சமயத்தில்தான் பா.ஜ.க. மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான சுப்பிரமணியன் சுவாமி, தி.மு.க. அரசை கலைக்க பாடுபடுவேன் என்று அதிரடியாக மிரட்டல் விடுத்தார்.
இதுகுறித்து சுப்பிரமணியன் சுவாமி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளேன். சனாதன தர்மம் குறித்து தி.மு.க.வினர் மீண்டும் பேசினால் ஆட்சியைக் கலைக்கப் பாடுபடுவேன். என்னால் ஆட்சியைக் கலைக்க முடியும் என்பதை 1991-லேயே நிரூபித்துள்ளேன்” என்று கூறியிருந்தார்.
அதேபோல மற்றொரு பதிவில், “தற்கொலை செய்யும் நிலையில் தி.மு.க. உள்ளதா? சனாதன தர்மத்தின் மீது முட்டாள்தனமான, தேசவிரோதத் தாக்குதல் நடத்துவது என்பது 1990-91-ல் விடுதலைப் புலிகளுக்கு துணையாக இருந்து கருணாநிதி தற்கொலை (ஆட்சி கலைப்பு) செய்து கொண்டதை போன்றதாகும்.
அந்த சமயத்தில், நான் ராஜீவ் காந்தி ஆதரவுடன் தி.மு.க. ஆட்சியை கலைத்தேன். அந்த வரலாறில் இருந்து கருணாநிதியின் மகன் (மு.க.ஸ்டாலின்) பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். மேலும், வெறிபிடித்தது போல் இந்து மதத்தை எதிர்ப்பதை நிறுத்துங்கள். இல்லாவிட்டால்…” என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
மேலும், கடந்த மாதம் சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சுப்பிரமணியன் சுவாமி, சனாதனம் குறித்து நீண்ட விளக்கம் அளித்துப் பேசியதோடு, தி.மு.க.வுக்கும் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த வீடியோவை கரூரைச் சேர்ந்த மோகன் என்பவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டதோடு, சுப்பிரமணியன் சுவாமியையும் டேக் செய்திருந்தார். இந்த வீடியோவை சுப்பிரமணியன் சுவாமி தற்போது ரீட்வீட் செய்திருக்கிறார்.
இந்த விவகாரம்தான் தி.மு.க.வினர் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. காரணம், 1991-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியைக் கலைத்தது இதே சுப்பிரமணியன் சுவாமி என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சுப்பிரமணியன் சுவாமியை பொறுத்தவரை, ஒரு விஷயத்தை சொன்னால், அதை வீம்புக்காவது செய்யக் கூடியவர். ஆகவே, சுப்பிரமணியன் சுவாமியால் ஆட்சிக்கு ஆபத்து வருமோ என்பதுதான் தி.மு..க.வினரின் அச்சமாக இருக்கிறது.
1991-ல் தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டது எப்படி?
1977-ல் எம்.ஜி.ஆர். முதல்வரான பிறகு, சுமார் 11 ஆண்டு காலம் தி.மு.க.வால் ஆட்சிக்கு வரவே முடியவில்லை. 1980 மற்றும் 1984-ம் ஆண்டு நடந்த தமிழக சட்டமன்றத் தேர்தல்களிலும் எம்.ஜி.ஆரின் அ.தி.மு.க.வே வெற்றிபெற்றது. ஆனால், தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். 1987-ம் ஆண்டு உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். இதனால், அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டு, ஜானகி அணி, ஜெயலலிதா அணி என இரண்டாகப் பிரிந்தது.
இதனால், எம்.ஜி.ஆரின் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. எனவே, 1989-ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வின் இரு அணிகளும் தோல்வியைச் சந்திக்க, தி.மு.க. வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. இதன் பிறகு, அரசியலில் இருந்து எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி விலகிக் கொள்ள, ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க. மீண்டும் ஒருங்கிணைக்கப்பட்டது. எனவே, பழைய இரட்டை இலை சின்னமும் கிடைத்தது.
இதன் பிறகு, 1989-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க., காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து அதிக இடங்களைக் கைப்பற்றியது. ஆனால், மத்தியில் காங்கிரஸ் வெற்றிபெறவில்லை. இதனால், வி.பி.சிங் தலைமையிலான தேசிய முன்னணி ஆட்சி அமைத்தது. எனினும், 12 மாதங்களில் இந்த ஆட்சி கலைந்து, காங்கிரஸ் கூட்டணியுடன் சந்திரசேகர் தலைமையிலான அரசு அமைந்தது.
இதையடுத்து, தமிழகத்தில் நடந்து வரும் தி.மு.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாகக் கூறி, ஆட்சியைக் கலைக்கும்படி அ.தி.மு.க.வும், காங்கிரஸ் கட்சியும் மத்திய அரசை வலியுறுத்தின. அப்போது மத்திய சட்டத்துறை அமைச்சராக இருந்தவர் ஜனதா கட்சியின் தலைவரான சுப்பிரமணியன் சுவாமி.
இவர், சென்னையில் 1990-ம் ஆண்டு இ.பி.ஆர்.எல்.எஃப். தலைவர் பத்மநாபா, விடுதலைப் புலிகள் அமைப்பினரால் கொலை செய்யப்பட்டதைச் சுட்டிக்காட்டி, தி.மு.க. விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக இருப்பதாகக் கூறி ஆட்சியைக் கலைக்க பரிந்துரைத்தார். விளைவு, 1991-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டது.
இந்த நிலையில்தான், சனாதனத்தை ஒழிப்போம் என்று தி.மு.க. தலைவர் மற்றும் முதல்வர் ஸ்டாலினின் மகனும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பேசி இருக்கும் நிலையில், தி.மு.க. ஆட்சியை கலைக்க பாடுபடுவேன் என்று கூறியிருக்கிறார். மேலும், சனாதனம் குறித்தும், தி.மு.க. குறித்தும் தான் பேசிய பழைய வீடியோ ஒன்றையும் ரீட்வீட் செய்திருக்கிறார்.
மேலும், 1991-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டதற்கு, 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் சுப்பிரமணியன் சுவாமி புதிய விளக்கம் அளித்திருந்தார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் (அப்போது ட்விட்டர்) பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “பிரிட்டிஷ் ஏகாதிபத்தியமானது தமிழகத்தில் மூளைச்சலவை செய்ததால், இந்தி, சமஸ்கிருதம் மற்றும் பிராமணர்களை தாக்குகின்றனர். இத்தனைக்கும் கருணாநிதி பிராமண ராவணனை வழிபடுகிறவர். நான் 1991-ல் தி.மு.க. ஆட்சியைக் கலைத்ததற்கு இவையெல்லாம் காரணங்கள்” என்று குறிப்பிட்டிருந்தார்.
மேலும், கடந்த 2022-ம் மதுரையில் பேசிய சுப்பிரமணியன் சுவாமி, “விடுதலைப் புலிகளுக்கு தமிழகத்தில் சிகிச்சை அளிக்கக் கூடாது. அப்படி அளித்தால் ஆட்சி கலைப்படும் என்று 1990-ம் ஆண்டு கூறினேன். ஆட்சியைக் கலைத்தால் இரத்த ஆறு ஓடும் என்று கருணாநிதி என்னிடம் கூறினார். ஆனால், சொன்னபடியே 1991-ம் ஆண்டு ஜனவரி 31-ம் தேதி தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டது. எனினும், ஒரு சைக்கிள்கூட எரியவில்லை. மேலும், அடுத்த 2 மாதங்களில் நடைபெற்ற தேர்தலில் தி.மு.க. வெறும் 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றது” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.