ஒரு நாள் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா விளையாடும் அடுத்த போட்டியில் ஹர்திக் பாண்டியா அதிகாரபூர்வமாக நீக்கப்பட்டார்.
ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்றுவரும் நிலையில், இந்திய அணியின் துணை தலைவர் ஹர்திக் பாண்டியா, இந்தியா அடுத்து ஆட உள்ள உலகக்கோப்பைப் போட்டியில் இருந்து அதிகாரப்பூர்வமாக நீக்கப்பட்டார்.
இந்திய அணி தன்னுடைய அடுத்தப் போட்டியில் தர்மசாலாவில் நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாட உள்ளது. இந்திய வீரர்கள் தரம்சாலாவுக்கு கிளம்ப உள்ள நிலையில், பாண்டியா மட்டும் பெங்களூர் விரைந்துள்ளார். அவருக்கு அங்கே சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.
இந்த நிலையில், பிசிசிஐ தன் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் ஹர்திக் பாண்டியா நியூசிலாந்து அணிக்கு எதிரானப் போட்டியில் பங்கேற்க மாட்டார் எனவும், இந்தியா அதன் பின் ஆட உள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரானப் போட்டியில் பங்கேற்க அவர் லக்னோ செல்வார் எனவும் அறிவித்துள்ளது.
வங்கதேச அணிக்கு எதிரானப் போட்டியில் பாண்டியாவிற்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டது அதனால் அவர் அந்தப் போட்டியில் மூன்று பந்துகள் மட்டுமே வீசினார். அடுத்து அவருக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டு அதன் முடிவுகள் லண்டனை சேர்ந்த சிறப்பு மருத்துவர் ஒருவரிடம் காண்பிக்கப்பட்டது.
அவரது ஆலோசனையின் படி பாண்டியாவுக்கு குறிப்பிட்ட மருந்தை ஊசி மூலமாக செலுத்த முடிவு செய்துள்ளது பிசிசிஐ. அதற்காக அவர் பெங்களூரில் உள்ள பிசிசிஐ-இன் தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு விரைந்துள்ளார். அங்கே அவருக்கு அந்த ஊசி செலுத்தப்பட உள்ளது. அவர் காயம் குணமாகும் வரை அங்கே தங்கி இருப்பார் எனவும் கூறப்படுகிறது. அதன் பின் அவர் இங்கிலாந்துப் போட்டிக்கு தயார் ஆவார் என்று தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், இந்தியா – நியூசிலாந்துப் போட்டியில் ஹர்திக் பாண்டியாவிற்கு மாற்றாக எந்த வீரரை ஆட வைப்பது என்ற பிரச்சனையும் ஏற்பட்டுள்ளது. முகமது ஷமி அல்லது சூர்யகுமார் யாதவ் அணியில் சேர்க்கப்படலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.