நமோ பாரத் இரயில் ஓட்டுனர் முதல் பணியாளர்கள் வரை அனைவரும் பெண்கள். இதுவே இந்தியாவில் வளர்ந்து வரும் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதன் அடையாளமாகும் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
டெல்லி-காசியாபாத்-மீரட் நமோ பாரத் எக்ஸ்பிரஸ் இரயிலை தொடங்கி வைத்து பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், “இது முழு நாட்டிற்கும் ஒரு வரலாற்றுத் தருணம். இன்று இந்தியாவின் முதல் அதிவிரைவு இரயில் சேவையான “நமோ பாரத்” இரயில் சேவையைத் தொடங்கியுள்ளது. 4 ஆண்டுகளுக்கு முன்பு, நான் டெல்லி-காசியாபாத்-மீரட் பிராந்திய வழித்தட திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினேன். இன்று சாஹிபாபாத் முதல் துஹாய் டிப்போ வரையிலான பாதையில் நமோ பாரத் சேவை தொடங்கியுள்ளது.
நான் முன்பே சொன்னேன், இன்றும் சொல்கிறேன். நாங்கள் என்ன அடித்தளம் அமைத்தோமோ, அதையும் நாங்களே திறந்து வைக்கிறோம். இந்த புதிய இரயிலில் (நமோ பாரத்), ஓட்டுனர் முதல் பணியாளர்கள் வரை அனைவரும் பெண்கள். இதுவே இந்தியாவில் வளர்ந்து வரும் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதன் அடையாளமாகும்.
இந்த அதி நவீன இரயிலில் பயணம் செய்யும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி. எனது குழந்தைப் பருவத்தை இரயில்வே பிளாட்பாரத்தில் கழித்தேன், இன்று இந்த புதிய இரயில்வே வடிவம் என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது. இந்த அனுபவம் மகிழ்ச்சி அளிக்கிறது. நமது பாரம்பரியம் நவராத்திரியின்போது மங்களகரமான வேலைகளைச் செய்வதுதான். அந்த வகையில், இன்று இந்தியாவின் முதல் நமோ பாரத் இரயில் காத்யாயனியின் ஆசீர்வாதத்தைப் பெற்றுள்ளது” என்றார்.
மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறுகையில், “இத்திட்டத்தின் வெற்றி சந்திரயான் 3 விண்கலத்துக்குச் சமம். விரைவில் மிகப்பெரிய மெட்ரோ நெட்வொர்க்கை உருவாக்குவோம்” என்றார்.
உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறுகையில், “இது நவராத்திரியில் எங்களுக்குக் கிடைத்த பரிசு. கடந்த ஒன்பதரை ஆண்டுகளில் உங்கள் தொலைநோக்கு பார்வையில் உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்புகளை நாங்கள் கண்டுள்ளோம். விமான நிலையம், இரயில் நிலையங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. நமோ பாரத் புதிய இந்தியாவின் சின்னம்” என்றார்.