காவல்துறையினரின் பங்களிப்பால், கடந்த ஓராண்டில் பயங்கரவாதம், தீவிரவாதம் மற்றும் நக்சல் தாக்குதல்கள் 65 சதவீதம் குறைந்திருக்கிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருக்கிறார்.
1959 அக்டோபர் 21-ம் தேதியன்று லடாக்கின் ஹாட் ஸ்பிரிங்ஸ் என்கிற இடத்தில் சீனப் படையினர் பதுங்கியிருந்து ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் (CRPF) 10 வீரர்களை சுட்டுக் கொன்றனர். இவர்களின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21-ம் தேதி ‘காவல்துறை நினைவு தினம்’ அனுசரிக்கப்படுகிறது.
மேலும், காவல்துறையில் உயிர் தியாகம் செய்த வீரர்களின் நினைவாக, டெல்லியில் தேசிய காவல்துறை நினைவிடம் அமைக்கப்பட்டது. இதை, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2018-ம் ஆண்டு நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த நினைவிடத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று காலை மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அமித்ஷா, “எந்த நாட்டிலும், துடிப்பான காவல்துறை இல்லாமல் எல்லைப் பாதுகாப்பும், உள்நாட்டு பாதுகாப்பும் சாத்தியமில்லை. நாட்டிலுள்ள அனைத்து அரசுத் துறைகளிலும், காவல்துறையின் கடமை மிகவும் கடினமானது என்பதை உணர்கிறேன். எந்த வானிலையிலும், பண்டிகை நேரத்திலும் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் எப்போதும் ஒரு போலீஸ்காரர் கடமையாற்றுகிறார்.
அதேபோல, பயங்கரவாதமோ, குற்றமோ, பெரும் கூட்டமோ எதுவாக இருந்தாலும், பொதுமக்களின் உயிரைப் பாதுகாக்க காவல்துறை எப்போதும் உள்ளது. நம் தேசத்தின் காவல்துறை ஒவ்வொரு விஷயத்திலும் தன்னை நிரூபித்துள்ளது. காவல்துறையினரின் பங்களிப்பால், கடந்த ஓராண்டில் பயங்கரவாதம், தீவிரவாதம் மற்றும் நக்சல் தாக்குதல்கள் 65 சதவீதம் குறைந்திருக்கிறது.
இடதுசாரி தீவிரவாதம் உள்ள பகுதியாக இருந்தாலும் சரி, வடகிழக்கு மாநிலங்களாக இருந்தாலும் சரி, ஜம்மு காஷ்மீர் மாநிலமாக இருந்தாலும் சரி, இந்த 3 இடங்களிலும் அமைதியை நிலைநாட்டியதில் நமது ராணுவ வீரர்கள் வெற்றி பெற்றுள்ளனர். பயங்கரவாதத்திற்கு எதிரான பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையை வைத்து, நாங்கள் கடுமையான சட்டங்களை இயற்றியுள்ளோம். அதன்படி, காவல்துறையில் தொழில்நுட்ப கட்டமைப்பை அமைப்பதன் மூலம், பயங்கரவாதத்திற்கு எதிரான சிறந்த சக்தியாக மாற்றுவது எங்கள் முயற்சியாக இருக்கிறது.
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இந்திய அரசு 3 புதிய சட்டங்களைக் கொண்டு வருகிறது. இது நமது குற்றவியல் நீதி முறையை மாற்றும். இவை மூன்றும் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டவை. இப்போது, இந்த சட்டங்களில் இந்தியத்தன்மை மட்டும் அல்ல, உரிமைகளும் பிரதிபலிக்கும். ஒவ்வொரு குடிமகனும் நமது அரசியலமைப்பின் உணர்வில் பாதுகாக்கப்படுவார்கள்.
வரும் நாட்களில் அமிர்த காலத்துக்கு பிரதமர் அழைப்பு விடுத்திருக்கிறார். சுதந்திரம் கிடைத்து 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், 76-வது ஆண்டு முதல் நூற்றாண்டு வரை, இந்த 25 ஆண்டுகள் நாட்டை உலகின் முதல் நிலைக்கு கொண்டு செல்லும் காலம். இதற்காக, 140 கோடி மக்கள் கூட்டாக தீர்மானித்துள்ளனர்” என்றார்.