இடைக்கால ஜாமீன் கிடைத்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், 4 ஆண்டுகளுக்குப் பிறகு நாடு திரும்பி இருக்கிறார். பாகிஸ்தானில் நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், நவாஸ் ஷெரீப் நாடு திரும்பி இருப்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சியின் நிறுவனத் தலைவரா நவாஸ் ஷெரீப், 3 முறை அந்நாட்டின் பிரதமராக இருந்தார். இவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்கள் இருக்கின்றன. இந்த சூழலில், கடந்த 2017-ம் ஆண்டு பனாமா ஆவண முறைகேடு தொடர்பாக, நவாஸ் ஷெரீப் பிரதமர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
பின்னர், ஊழல் வழக்கில் நவாஸுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, அந்நாட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். சிறையில் அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், சிகிச்சைக்காக வெளிநாடு செல்வதற்காக 4 வார ஜாமீன் கேட்டார்.
ஜாமீன் கிடைத்த நிலையில், கடந்த 2019-ம் ஆண்டு தனது குடும்பத்தினருடன் ஐரோப்பிய நாடான பிரிட்டனுக்குச் சென்றார். அதன்பிறகு, நவாஸ் பாகிஸ்தானுக்கு திரும்பவே இல்லை. தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்த நிலையில், பாகிஸ்தானில் இம்ரான் கான் அரசு கவிழ்ந்தது.
இதன் பிறகு, நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் ஷெபாஸ் ஷெரீப் பிரதமராகப் பதவியேற்றார். அதேசமயம், முன்னாள் பிரதமர் இம்ரான் கான், தோஷாகான எனப்படும் அரசு பரிசுப் பொருட்களை விற்று பண மோசடி செய்த வழக்கில் 3 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.
இதனிடையே, பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பதவி காலம் முடிவடையவிருந்த நிலையில், ஷெபாஸ் ஷெரீப் முன்கூட்டியே நாடாளுமன்றத்தைக் கலைத்து விட்டார். எனவே, அங்கு விரைவில் பொதுத்தேர்தல் நடக்கவிருக்கிறது. இம்ரான் கான் சிறையில் இருப்பதால், மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றி விடலாம் என்று நவாஸ் ஷெரீப் கருதுகிறார்.
அதேசமயம், அவர் பாகிஸ்தான் திரும்பினால் கைது செய்யப்படும் அபாயம் உள்ளது. எனவே, நவாஸ் ஷெரீப் தேர்தலில் பிரசாரம் செய்ய ஏதுவாக, அவருக்கு இடைக்கால ஜாமீன் கோரி அவரது சார்பில் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது.
இதையடுத்து, நவாஸ் ஷெரீப் தனது குடும்பத்தினருடன் பிரிட்டனில் இருந்து துபாய் வந்து, அங்கிருந்து உமீத் இ பாகிஸ்தான் என்கிற சார்டர்டு விமானத்தில் இஸ்லாமாபாத் வந்து இறங்கினார். அவரை, விமான நிலையத்தில் கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் வரவேற்றனர். நாடு திரும்பிய நவாஸ், பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.
நவாஸ் வருகையை ஒட்டி, 7,000 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.