நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மத்திய அரசின் நலத்திட்டங்களை 6 மாதங்களுக்குள் முழுமையாக செயல்படுத்த இலக்கு நிர்ணயித்து பிரதமர் மோடி உத்தரவிட்டிருக்கிறார்.
கிராமப்புற ஏழை எளிய மக்களுக்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. உதாரணமாக, இலவச வீடு வழங்கும் திட்டம், வீீடுதோறும் கழிப்பறை, அனைவருக்கும் தூய்மையான மற்றும் சுகாதாரமான குடிநீர், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 ரூபாய் நிதியுதவி திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இத்திட்டங்கள் பயனாளிகளை முழுமையாகச் சென்றடைய வேண்டும். அதற்கு, மத்திய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கடினமாக உழைக்க வேண்டும் என்று சமீபத்தில் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டம் மற்றும் அதிகாரிகள் கூட்டத்தில் பிரதமர் மோடி வலியுறுத்தி இருந்தார்.
இந்த நிலையில், மத்திய அரசுத் திட்டங்களை முழுமையாகச் செயல்படுத்த, பிரதமர் மோடி 6 மாதங்கள் இலக்கு நிர்ணயித்து உத்தரவிட்டிருக்கிறார். இதுகுறித்து அரசு அதிகாரிகள் கூறுகையில், “அரசு நலத் திட்டங்கள் நாட்டின் அனைத்து பஞ்சாயத்துகளையும் முழுதுமாக சென்றடைந்ததை உறுதி செய்வதற்காக, தீபாவளி முடிந்ததும் மிகப் பெரிய இயக்கம் தொடங்கப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக ‘விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா’ என்கிற பெயரில் விசேஷமாக வடிவமைக்கப்பட்ட ரதம் ஒன்று நாடு முழுவதும் சென்று பயனாளிகளை பதிவு செய்யும்” என்றார்கள். இதன் மூலம், மத்திய அரசின் திட்டங்கள் நாடு முழுவதும் உள்ள அனைத்து ஏழை, எளிய மக்களையும் சென்றடைய வேண்டும் என்று மத்திய பா.ஜ.க. அரசு உறுதியாக இருக்கிறது என்பது தெளிவாகிறது.