இந்தியாவுடனான பதற்றத்திற்கு மத்தியில், எப்போதும் இல்லாத வகையில் எல்லைப் பகுதியில் சீனா தனது இராணுவ பலத்தையும், சாலைகள், விமான நிலையம், ஹெலிபேடுகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளையும் அதிகரித்து வருவதாக அமெரிக்க இராணுவத் தலைமையகமான பென்டகன் தெரிவித்திருக்கிறது.
இந்தியா – சீனா இடையே எல்லைக் கட்டுபாட்டுக் கோடு தொடர்பான பிரச்சனை தொடர்ந்து வருகிறது. அவ்வப்போது இந்திய எல்லைக்குள் சீனா ஊடுருவுவதும், இந்தியா எதிர்ப்புத் தெரிவித்ததும் பின்வாங்குவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது. கடந்த 2020-ம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கில் இதுபோன்ற ஊடுருவல் சம்பவத்தின்போது, இருநாட்டு இராணுவ வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டு, இரு தரப்பிலும் உயிர்ப்பலி ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதன் பிறகு, எல்லை அருகே இந்தியா பாதுகாப்பை அதிகரித்திருக்கிறது. அதேபோல, சீனாவும் கட்டமைப்புகளை அதிகரித்து வருகிறது. எனினும், கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பிறகு இந்தியாவும் சீனாவும் 20 முறை பேச்சுவார்த்தைகளை நடத்தின. சமீபத்தில், கடந்த 9 மற்றும் 10-ம் தேதிகளில் நடைபெற்ற 20-வது சுற்றுப் பேச்சுவார்த்தையின்போது எல்லைகளில் இருக்கும் படைகளை கணிசமாக விலக்கிக் கொள்ள வேண்டும் என்ற முடிவுக்கு இரு தரப்பும் வந்தன.
அதேபோல், எல்லைகளில் இருந்த படைகளை கணிசமாக விலக்கியும் இருந்தன. இந்த சூழலில்தான், டோக்லாம், பாங்காங் லேக் போன்ற எல்லைப் பகுதியில் சாலைகள் அமைத்தல், இரு பயன்பாட்டுக்கான விமான நிலையம் அமைத்தல், பல்வேறு ஹெலிபேடுகள் அமைத்தல் போன்ற செயல்களில் சீனா ஈடுபட்டு வந்ததாக பென்டகன் தெரிவித்திருக்கிறது.
இதுகுறித்து பென்டகன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “2020-ம் ஆண்டு மே மாதத்தின் தொடக்கத்தில் இருந்து, இந்தியா – சீனா எல்லையில் நீடித்த பதற்றங்கள் சீனாவின் வெஸ்டர்ன் தியேட்டர் கமாண்டின் கவனத்தைப் பெற்றன. தொடர்ந்து, எல்லை வரையறை குறித்து இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே உள்ள மாறுபட்ட நிலைப்பாடுகள், பல மோதல்களுக்கும், எல்லையில் படைகளை நிறுத்துவதற்கும் வழிவகுத்திருக்கிறது.
20 இந்திய வீரர்கள் வீர மரணமடைந்த கால்வான் பள்ளத்தாக்கு மோதலுக்கு பதிலளிக்கும் விதமாக, சீனாவின் வெஸ்டர்ன் கமாண்ட் எல்லையில் பெரிய அளவிலான போக்குவரத்து வசதிகள் மேம்படுத்தப்பட்டிருக்கிறது. சீனாவிடம் 500-க்கும் மேற்பட்ட அணு ஆயுதங்கள் இருக்கின்றன. 2030-க்குள் இந்த எண்ணிக்கை 1,000-க்கும் மேல் உயரும். ஏற்கெனவே, உலகிலேயே மிகப் பெரிய கடற்படையைக் கொண்டிருக்கும் சீனா, கடற்படையை மேலும் வலுப்படுத்தி வருகிறது.
மேலும், 2022-ம் ஆண்டில் சீனா எல்லையில் இராணுவ உள்கட்டமைப்பைத் தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது. டோக்லாம் அருகே நிலத்தடி சேமிப்பு குடோன்கள், புதிய சாலைகள் மற்றும் அண்டை நாடான பூடானில் புதிய கிராமங்கள், பாங்காங் ஏரியின் மீது 2-வது பாலம், இரட்டை பயன்பாட்டுக்குரிய விமான நிலையங்கள் மற்றும் பல ஹெலிபேடுகள் ஆகியவற்றை சீனா உருவாக்கி இருக்கிறது” என்று தெரிவித்திருக்கிறது.