தேனி மாவட்டத்தில் உத்தமபாளையம் உள்ளது. இந்நிலையில் தான் இன்று அதிகாலையில் உத்தமபாளையத்தில் திடீரென்று என்ஐஏ எனும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர்.
உத்தமபாளையத்தில் உள்ள ஒரு வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் நடத்திய இந்த சோதனை என்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் மக்கள் குழம்பி போயினர்.
இந்த சோதனையின் முடிவில் அங்கு பதுங்கி இருந்த இம்ரான் கானை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர்.
விசாரணையில் அவர் இந்தியாவில் இருந்து ஐஎஸ்ஐஎஸ் என்னும் இஸ்லாமிய தீவிரவாத அமைப்புக்கு ஆட்சேர்த்ததாகவும், இதையடுத்து அவரை அதிரடியாக கைது செய்துள்ளதும் தெரியவந்தது.
ராமநாதபுரத்தை சேர்ந்தவர் இம்ரான் கான். இவர் சட்டவிரோதமான நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார். இதையடுத்து என்ஐஏ அதிகாரிகள் இம்ரான் கானை கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக தீவிரமாக கண்காணித்து வந்தனர். அப்போது அவர் ஐஎஸ்ஐஎஸ் என்னும் இஸ்லாமிய தீவிரவாத அமைப்புக்கு, இந்தியாவில் இருந்து ஆட்களை அனுப்பி வைத்துள்ளதை என்ஐஏ அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இங்குள்ள இளைஞர்களை மூளைச்சலவை செய்து வெளிநாடுகளில் தீவிரவாத பயிற்சிக்கு அவர் அனுப்புவதும், பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு தீவிரவாதிகளை வரவழைத்ததும், அவர்களை இலங்கைக்கு அனுப்பிவைப்பதும், பிறகு இலங்கையில் இருந்து கள்ள படகில் ராமநாதபுரத்துக்கு வரவழைத்து பெங்களூர் உள்பட பிற இடங்களுக்கு அனுப்பி வைத்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் பதுங்கி இருந்த இம்ரான் கானை என்ஐஏ அதிகாரிகள் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தி அவரை கைது செய்துள்ளனர்.