பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், 2 நாள் பயணமாக அஸ்ஸாம் மற்றும் அருணாச்சலப் பிரதேசம் செல்கிறார். அப்போது, அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் செக்டார் பகுதியில் பாதுகாப்புப் படை வீரர்களுடன் உரையாடுகிறார்.
அருணாச்சலப் பிரதேச எல்லையில் சீன இராணுவம் அவ்வப்போது அத்துமீறி வருகிறது. குறிப்பாக, தவாங் செக்டார் பகுதியில் சீன இராணுவம் பலமுறை ஊடுருவ முயன்றிருக்கிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தவாங் செக்டாரில் சீன இராணுவம் அத்துமீறி ஊடுருவ முயன்றது. அப்போது, ஏற்பட்ட மோதலில் இரு தரப்பிலும் சில வீரர்கள் காயமடைந்தனர். எனினும், நமது பாதுகாப்புப் படை வீரர்களின் உறுதியான எதிர்ப்பால், சீனத் துருப்புகள் பின்வாங்கின.
இதனால், தவாங் செக்டார் எப்போதுமே பரபரப்பான பகுதியாகக் கருதப்படுகிறது. எனவே, இந்த ஆண்டு தொடக்கத்தில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தவாங் செக்டாருக்கு சென்று, பாதுகாப்பு நிலையை ஆய்வு செய்தார். இது ஒருபுறம் இருக்க, அருணாச்சலப் பிரதேசத்தை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, சீனா வெளியிட்ட வரைபடத்தில் அருணாச்சலப் பிரதேச மாநிலத்தை தனது பகுதியாக காட்சிப்படுத்தி இருந்தது.
இதனிடையே, கடந்த வாரம் அருணாச்சலப் பிரதேச மாநிலம் தவாங் செக்டாரில் உள்ள யாங்ட்சே பகுதியில் சீனப் படைகள் உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டை அத்துமீறி ஊடுருவியதாகவும், இந்திய வீரர்களின் உறுதியான எதிர்ப்பால் பின்வாங்கியதாகவும், இந்த மோதலில் இரு தரப்பிலும் சில வீரர்கள் காயமடைந்ததாகவும், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில்தான், அருணாச்சலப் பிரதேசம் மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களுக்கு 2 நாள் பயணமாக ராஜ்நாத் சிங் இன்று செல்கிறார். இதுகுறித்து ராஜ்நாத் சிங் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “2 நாள் பயணமாக இன்று அஸ்ஸாம் மற்றும் அருணாச்சலப் பிரதேச மாநிலங்களுக்குச் செல்லும் நான் தேஜ்பூரை அடைகிறேன்.
இந்த பயணத்தின்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் ஆயுதப் படை வீரர்களுடன் கலந்துரையாடுவதோடு, அப்பகுதிகளையும் பார்வையிடுகிறேன். மேலும், இராணுவ வீரர்களுடன் தசரா பண்டிகையை கொண்டாடுவதற்கு ஆர்வமாக இருக்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.
Today, 23rd October, I shall be reaching Tezpur on a 2 day visit to Assam & Arunachal Pradesh. During my visit, I will interact with Armed Forces personnel deployed in the region and also visit forward areas.
Looking forward to celebrate Dussehra with the soldiers in Tawang.
— Rajnath Singh (@rajnathsingh) October 23, 2023