பிரபல தொழில் அதிபரும், வாக் பக்ரி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருமான பராக் தேசாய், தெரு நாய்கள் தாக்கியதில் உயிரிழந்தார். அவருக்கு வயது 49.
குஜராத்தைச் சேர்ந்தவர் தொழில் அதிபர் பராக் தேசாய். இவர் வாக் பக்ரி என்ற பிரபல நிறுவனத்தை நடத்தி வருகின்றார். இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகப் பதவி வகித்து வந்தார்.
30 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறந்த தொழில் அதிபராக உள்ளார். தமது குழுமத்தின் சர்வதேச வணிகம், விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் ஆகியவற்றிற்குத் தலைமை தாங்கி வழிநடத்திச் சென்றார். மேலும், இந்தியத் தொழில் கூட்டமைப்பு (CII) போன்ற முன்னணி தொழில் தளங்களில் தீவிரமாக பணியாற்றினார்.
இந்த நிலையில், கடந்த 15 -ம் தேதி வீட்டு வாசலில் அவர் இருந்தபோது, அந்த வழியாகத் தெரு நாய்கள் வந்துள்ளது. அதனை அவர் விரட்ட முயன்றார். அப்போது, தேசாய் கீழே விழுந்து படுகாயமடைந்தார். அங்கிருந்து வாட்ச்மேன் இந்த நிகழ்வைக் கண்டதும் தேசாயின் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, பிரபல தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து,தேசாய்-க்கு அறுவை சிகிச்சை செய்ய டாக்டர்கள் குழு முடிவு செய்தனர். ஆனால், அவருக்கு மூளையில் ஏற்பட்ட ரத்தக் கசிவு காரணமாகத் தேசாய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனை மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
பராக் தேசாய்-க்கு விதிஷா என்ற மனைவியும், பரிஷா என்ற மகளும் உள்ளனர்.
தேசாயின் மறைவிற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் தொழிலதிபர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.