விஜயதசமியை முன்னிட்டு மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது.
கடந்த 1925-ம் ஆண்டு விஜயதசமி அன்று ஆர்எஸ்எஸ் இயக்கம் தொடங்கப்பட்டது. அதன் நினைவாக விஜயதசமி நாளில் நாடு முழுவதும் பிரம்மாண்ட ஊர்வலம் நடத்தப்படுவது வழக்கம்.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் தலைமையகம் அமைந்துள்ளது. இதனால், இங்கு ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமி நாளில் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் மிகப் பிரம்மாண்ட அணிவகுப்பு நடைபெறும்.
வழக்கம் போல் இந்த ஆண்டும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் டாக்டர் மோகன் பாகவத் தலைமையில் ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் திரளாகப் பங்கேற்ற அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது.
நாக்பூர் சிபி- பெரர் கல்லூரி சாலையில் தொடங்கிய இந்த பேரணி ரெசிம்பார்க் மைதானம் வரை நடைபெற்றது. ரெசிம்பார்க்-கில் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றது. அப்போது, ஆர்.எஸ்.எஸ். நிறுவனர் ஹெட்கேவருக்கு, ஆர்எஸ்எஸ் தலைவர் டாக்டர் மோகன் பாகவத் மரியாதை செலுத்தினார்.
இந்த ஆண்டு அணிவகுப்பு ஊர்வல நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகத் திரைப்படப் பாடகர் மற்றும் இசையமைப்பாளர் சங்கர் மகாதேவன் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய சங்கர் மகாதேவன், ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் அணிவகுப்பு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றது தனது வாழ்நாளில் பெருமிதமான தருணம். இதற்காக நான் ஆர்எஸ்எஸ் இயக்கத்திற்கு நன்றி செலுத்துகிறேன் என நெகிழ்ச்சியோடு தெரிவித்தார்.