காஸாவின் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஈரான் பல ஆண்டுகளாக ஆதரவு அளித்து வருகிறது. ஈரான் தயவின்றி ஹமாஸ் தீவிரவாதிகளால் தொடர்ந்து செயல்பட முடியாது என்று அமெரிக்கா குற்றம்சாட்டி இருக்கிறது.
யூதர்களின் தேசமான இஸ்ரேல் மீது, காஸா நகரின் ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த 7-ம் தேதி கொடூரத் தாக்குதலை நடத்தினர். ஒரே நேரத்தில் 7,000 ஏவுகணைகளை ஏவி இஸ்ரேலை திக்குமுக்காட வைத்தனர். மேலும், ஏவுகணைகளை நடுவழியிலேயே தாக்கி அழிக்கும் இஸ்ரேல் நாட்டின் இரும்புக் கவசத்தையும் செயலிழக்கச் செய்தனர். மேலும், 18-வது நாளாக போர் நீடித்து வரும் நிலையில், ஹமாஸ் தீவிரவாதிகளிடம் இன்னும் ஆயுதங்கள் இருக்கின்றன.
ஹமாஸ் தீவிரவாதிகளிடம் இவ்வளவு ஏவுகணைகள் மற்றும் இரும்புக் கவசத்தை அழிக்கும் தொழில்நுட்பம் மற்றும் ஆயுதங்கள் ஆகியவை இருக்க வாய்ப்பே இல்லை. ஆகவே, இஸ்ரேல் மீதான போருக்கு ஏதாவது ஒரு நாடு ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஏவுகணை மற்றும் ஆயுத உதவி உள்ளிட்டவற்றை செய்யக்கூடும் என்கிற சந்தேகம் எழுந்தது. இதனிடையே, பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பின் முக்கியத் தளபதி காஸாவில் கொல்லப்பட்டதின் மூலம், அவ்வமைப்பு உதவி செய்வது தெரியவந்தது.
இந்த நிலையில், அமெரிக்க தேசிய பாதுகாப்புக் கவுன்சிலின் செயல்திட்ட தொடர்புகளுக்கான ஒருங்கிணைப்பாளர் ஜான் கிர்பி செய்தியாளர்களிடம் பேசுகையில், “ஹமாஸ் தீவிரவாத அமைப்புக்கு, ஈரான் பல ஆண்டுகளாக ஆதரவளித்து வருகிறது. இரு தசாப்தங்களாக இந்த ஆதரவு உள்ளது. ஈரான் இன்றி ஹமாஸ் அமைப்பினரால் இயங்கவோ அல்லது தொடர்ந்து செயல்படவோ முடியாது.
அதற்காக, கடந்த 7-ம் தேதி நடந்த சம்பவத்தில் ஈரான் பங்கு கொண்டிருப்பதாகவோ அல்லது தாக்குதல் நடத்தும்படி ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு உத்தரவிட்டதாகவோ கூறுவதற்கு, ஒரு குறிப்பிட்ட உளவுத் தகவலை நாங்கள் வைத்திருக்கிறோம் என்றோ நான் சொல்ல வரவில்லை. ஆனால், உலகில் கெட்ட நபர்களுடன் சேர்ந்து கெட்ட விஷயங்களை ஈரான் செய்து வருகிறது என்ற உண்மையில் இருந்து, ஒருவரும் விலகிச் சென்று விட முடியாது. இதில் யாரும் சந்தேகம் கொள்ள முடியாது” என்று கூறியிருக்கிறார்.