தொடர் விடுமுறை காரணமாக ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
சேலம் மாவட்டம் ஏற்காடு பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தளங்களில் ஒன்றாக உள்ளது. ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டுக்கு தினந்தோறும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து, வெளி மாநிலங்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருகின்றனர்.
இந்த நிலையில் பள்ளிகளுக்குத் தொடர் விடுமுறை என்பதால், இன்று ஏற்காடு சுற்றுலாத் தளத்தில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். காலையில் இருந்தே பல்வேறு வாகனங்களில் சுற்றுலாப் பயணிகள் ஏற்காட்டுக்கு வந்த வண்ணம் இருந்தனர். இதனால் எங்குப் பார்த்தாலும் சுற்றுலாப் பயணிகள் கூட்டமாகக் காணப்பட்டது.
ஏற்காட்டில் பனிப்பொழிவு பெய்து வருவதாலும், இடையிடையே சாரல் மழை பெய்து வருவதாலும், குளிர்ச்சியான தட்ப வெப்பநிலை நிலவுகிறது. மேலும் மலைகளில் மேகமூட்டம் படர்ந்து இரம்மியமாகக் காட்சி அளிக்கிறது.
ஏற்காட்டில் உள்ள பெரிய ஏரி, மான் பூங்கா, பொழுதுபோக்கு பூங்கா, அண்ணா பூங்கா போன்ற இடங்களில் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.
இயற்கையாக அமைந்த பெரிய ஏரியில் படகு சவாரி செய்வதற்காக, சுற்றுலாப் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அவர்கள் மிதி படகு, மோட்டார் படகு, துடுப்பு படகில் சென்று, குளுகுளு சூழலில் இயற்கை காட்சிகளைப் பார்த்து இரசித்தனர். மேலும், சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் நின்று செல்பி எடுத்தும், புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தனர்.
பூங்காவில் உள்ள சறுக்கு விளையாட்டு, ஊஞ்சல் உள்ளிட்டவற்றில் குழந்தைகளுடன் சேர்ந்து பெற்றோர்களும் உற்சாகமாக விளையாடி மகிழ்ந்தனர். இந்திய தாவரவியல் கழகத்தால் பராமரிக்கப்படுகின்ற தாவரவியல் பூங்காவில் பல்வேறு வகையான மலர் செடிகள் உள்ளது.
இவற்றைச் சுற்றுலாப் பயணிகள் கண்டு இரசித்தனர். ஏர்காட்டில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து இருந்ததால், பல்வேறு சாலைகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.