கலைஞர்களையும் அவர்களின் அனைத்து பங்களிப்புகளையும் கெளரவிக்கும் வகையில் சர்வதேச கலைஞர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.
ஓவியர், சிற்பி, பீங்கான் கலைஞர், கவிஞர் மற்றும் நாடக ஆசிரியர் என பன்முகத் திறமை கொண்ட ஸ்பானிஷ் கலைஞரான பாப்லோ பிக்காசோவைக் நினைவு கூறும் வகையில் அவரது பிறந்த நாளான அக்டோபர் 25ஆம் தேதி கலைஞர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.
கலைஞர்கள் சமூகத்திற்கு வழங்கிய பங்களிப்புகளை கொண்டாடும் வகையில் கனடாவைச் சேர்ந்த புகழ்பெற்ற கலைஞரான கிறிஸ் மேக்ளூர் 2004 ஆம் ஆண்டு சர்வதேச கலைஞர்கள் தினத்தைத் தொடங்கினார். அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 25 ந்தேதி சர்வதேச கலைஞர்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
கலை என்பது நீண்ட காலத்திற்கு முன்பே உருவானது மேலும் முக்கியமான நிகழ்வுகளின் பதிவுகளை வைத்திருக்கிறது. இதுமட்டுமின்றி கலை, கடந்த காலத்துடனானத் தொடர்பை வழங்குகிறது. கலைஞர்கள் நம் வரலாற்றை, அவர்களின் படைப்புகள் மூலம் அழியாமல் பதிவு செய்கிறார்கள்.
கலைஞர் என்ற வார்த்தை ஓவியர்கள், புகைப்படக்காரர்கள், சிற்பிகள், இசைக் கலைஞர்கள், நடனக் கலைஞர்கள், எழுத்தாளர்கள், நடிகர்கள் என பலரை உள்ளடக்கியது.
ஒருவன் படைப்பாற்றலுடன் பிறக்கும்போது, அந்த படைப்பாற்றல் கொண்டு ஒரு அழகான படைப்பை தன்னுடைய கடினமான உழைப்பின் மூலம் உருவாக்குகிறான். அந்த படைப்பு நம்மைச் சுற்றியுள்ள உலகத்திற்கு அழகு சேர்த்து நம்மையும் மெய்மறக்கச் செய்கின்றன.
மேலும் இந்த தினத்தில் கலைஞர்களின் கலையை போற்றி அவர்களோட சேர்ந்துக் கொண்டாடுவோம்.