சென்னையில் நடைபெற்ற பாகிஸ்தான் ஆப்கான் கிரிக்கெட் போட்டியின் போது ரசிகர் எடுத்துசென்ற தேசிய கொடியை அவமதித்தாக குற்றம்சாட்டப்பட்ட காவல்துறை அதிகாரி கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், அதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
கடந்த 23ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பாகிஸ்தான் ஆப்கான் அணிகளுக்கு இடையே கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியைக் காண சென்ற ரசிகர்கள் கையில் தேசிய கொடியை கொண்டு சென்றனர்.
அப்போது ரசிகரின் கையில் இருந்து தேசிய கொடியை பிடுங்கிய போலீஸ் அதிகாரி (எஸ்ஐ) ஒருவர் அதை குப்பை தொட்டியில் போட்டதாக கூறப்படுகிறது. அதுதொடர்பான வீடியோ வெளியானது. இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விடுத்துள்ள பதிவில், தேசியக் கொடியை அவமதித்த போலீஸ் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தவறினால் மாநில மக்களிடம் திமுக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரி மீது துறை ரீதியான விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது. அவர் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், விசாரணை அடிப்படையில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கூறப்பட்டுள்ளது. மேலும் பார்வையாளர்கள் பலர் மைதானத்திற்குள் தேசிய கொடி எடுத்து சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.