தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ளது வள்ளியம்மாள்புரம். இங்கு, சாலையோரம் திமுக, அதிமுக சார்பில் கொடிக் கம்பம் வைக்கப்பட்டுள்ளது.
இதேபோல, பாஜக சார்பிலும் ஒரு பிரமாண்ட கொடிக்கம்பம் வைக்கப்பட்டது. இந்த கொடிக் கம்பம் பட்டொலி வீசி பறந்து கொண்டிருந்தது.
சென்னையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வீட்டின் முன்பு இரவோடு இரவாக பாஜக கொடிக்கம்பம் அகற்றப்பட்டது போல், தென்காசி கடையம் அருகே உள்ள வள்ளியம்மாள்புரத்திலும் பாஜக கொடிக் கம்பம் அகற்றப்பட்டுள்ளது.
காலையில் அந்த வழியாகச் சென்றவர்கள் கொடிக் கம்பம் இல்லாததைக் கண்டு, கடும் அதிர்ச்சி அடைந்து பாஜக நிர்வாகிகளுக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.
தகவல் அறிந்து மின்னல் வேகத்தில் சம்பவ இடத்திற்கு வந்த மாநில நிர்வாகி பொன் பாலகணபதி, தென்காசி மாவட்ட பாஜக தலைவர் ராஜேஷ் ராஜா மற்றும் பாஜகவினர், கொடிக் கம்பத்தைத் தூக்கிக் கொண்டு சென்றவர்கள் யார் என விசாரணை செய்த போது, இரவில் போலீசாரே வந்து கொடிக் கம்பத்தை தூக்கிச் சென்றுள்ளது தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, அடுத்த கட்ட போராட்டத்திற்கு பாஜகவினர் தயாராகி வருகின்றனர்.
பாஜக கொடி பறப்பத்தைக் கூட ஆளும் கட்சியினரால் சகித்துக் கொள்ளமுடியாமல் அதை குறுக்கு வழியில் அகற்றும் அராஜகத்திற்கு மக்கள் விரைவில் பாடம் புகட்டுவார்கள் என பாஜகவினர் கொதிக்கின்றனர்.