தமிழக ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சுக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள காணொலியில்,
திமுக மற்றும் திராவிட அரசு திமுக ஆட்சியில் சட்டம் – ஒழுங்கு சந்தி சிரித்து வருவதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஒரு மாநிலத்தின் உச்சபட்ச அதிகாரம் படைத்தவர் ஆளுநர். அப்படிப்பட்ட ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசும் அளவுக்குத் தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு கெட்டுப் போய் உள்ளது.
தமிழகத்தில் ஆளுநருக்கே ஒரு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவுகிறது. அப்படி இருக்கையில் ஒரு சாதாரண மனிதனுக்கான பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.
தமிழக அரசு முற்றிலும் தோற்றுப்போன அரசாக உள்ளது. திராவிட முன்னேற்றக் கழக அரசு தோற்றுப் போன அரசாக இருக்கிறது. திராவிட அரசாங்கத்தில் சட்டம் – ஒழுங்கை கேள்விக்குறியாகி உள்ளது.
ஆளுநர் மாளிகை மீது பெட்ரேல் குண்டு வீசிய சம்பவம் மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அந்த குற்றவாளியைத் தண்டிப்பதோடு, அந்த குற்றவாளிக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்றும், குற்றவாளியை இயக்கியது யார் என்றும் தமிழக அரசு கண்டுபிடித்து அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஏற்கனவே கடந்த 2002 -ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக பாஜக தலைமையகமான கமலாலயத்தில் இதேபோல பெட்ரோல் குண்டு வீசியுள்ளான்.
மாநிலத்தில் உச்சபட்ச அதிகாரத்தில் இருக்கின்ற ஆளுநர் மாளிகை மீதே பெட்ரோல் குண்டு வீசி இருக்கிற இந்த சம்பவம் நடந்துள்ளது. ஆகையால் தமிழகக் காவல்துறை உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.