இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, சீனாவின் ஆராய்ச்சிக் கப்பலான ‘ஷியான் 6’ நேற்று இலங்கையை வந்தடைந்திருக்கிறது.
சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே எல்லைப் பிரச்சனை தொடர்பாக நீண்ட காலமாகவே மோதல் இருந்து வருகிறது. குறிப்பாக, 2020-ம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த சீன வீரர்களை, இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில், இந்தியத் தரப்பில் 20 வீரர்கள் வீரமரணமடைந்தனர்.
சீனத் தரப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்து அந்நாடு எந்த தகவலையும் வெளியிடாத நிலையில், 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியானது. இச்சம்பவத்திற்குப் பிறகு இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான விரிசல் அதிகரித்திருக்கிறது. இது தொடர்பாக 20 கட்டப் பேச்சுவார்த்தை நடந்தும் சுமூகத் தீர்வு எட்டப்படவில்லை.
இதனிடையே, கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பிறகு இந்தியாவை உளவு பார்க்கும் வேலையை சீனா தொடங்கியது. இதற்காக, நமது அண்டை நாடான இலங்கையை பயன்படுத்திக் கொண்டது. அதாவது, இலங்கைக்கு ஏராளமான கடனுதவிகளை வழங்கி இருக்கும் சீனா, அந்நாட்டின் ஹம்பந்தோடா துறைமுகத்தையும் 99 வருட குத்தகைக்கு எடுத்திருக்கிறது.
எனவே, அத்துறைமுகத்தை விரிவுபடுத்துவதாகக் கூறி, சீனாவின் உளவுக் கப்பல்களை இலங்கைக்கு அனுப்பி இந்தியாவை உளவு பார்த்து வருகிறது. அந்த வகையில், கடந்த 2 ஆண்டுகளில் சீன நாட்டுக் கப்பல்களான, ‘ஹை யாங் 24’ மற்றும் ‘யுவான் வாங் 5’ ஆகிய உளவுக் கப்பல்கள் இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி, இலங்கைக்கு வந்து நமது நிலைகளை உளவு பார்த்திருக்கிறது.
இந்த நிலையில்தான், தற்போது 3-வதாக ஆராய்ச்சிக் கப்பல் என்கிற போர்வையில் மற்றொரு உளவுக் கப்பலை சீனா இலங்கைக்கு அனுப்பி இருக்கிறது. ‘ஷி யான் 6’ என்று அழைக்கப்படும் இந்த ஆராய்ச்சிக் கப்பல், பல 100 கி.மீ. சுற்றளவில் உள்ள அனைத்து நிலைகளையும், செயற்கைக்கோள் உதவியுடன் உளவு பார்க்கும் திறன் கொண்டது.
இலங்கையின் தேசிய நீர்வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முகமையுடன் இணைந்து இலங்கைக்கு அருகே சர்வதேச கடற்பகுதியில் ஆராய்ச்சி செய்வதற்கு, அந்நாட்டு அரசிடம் சீனா ஏற்கெனவே கோரிக்கை விடுத்திருந்தது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்புத் தெரிவித்ததால் இலங்கை அரசு அனுமதி தராமல் காலதாமதம் தாழ்த்தி வந்தது.
மேலும், சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய இலங்கை அமைச்சர், இந்தியாவின் கவலைகள் எங்களுக்கு மிகவும் முக்கியமானது. ஆகவே, சீன கப்பலுக்கு அனுமதி தரவில்லை என்று கூறியிருந்தார். அதேசமயம், சீனக் கப்பல் வங்கக் கடலில் சுமார் 750 கிலோ மீட்டர் தொலைவில் நிலைநிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், “ஷி யான் 6” கப்பல் நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்திருக்கிறது. இதை இலங்கையின் வெளியுறவுத் துறை அமைச்சகமும் உறுதி செய்திருக்கிறது. மேலும், இக்கப்பல் 17 நாட்கள் இலங்கையில் நிலைநிறுத்தப்பட்டு கடல் பகுதியில் ஆராய்ச்சிப் பணியில் ஈடுபடும் என்று சீன அரசு ஏற்கெனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம், இலங்கையின் சர்வதேசக் கடற்பகுதியில் இருந்து தமிழகத்தில் உள்ள கூடங்குளம், கல்பாக்கம் அணுசக்தி ஆராய்ச்சி மையங்களையும், சென்னை, துாத்துக்குடி உள்ளிட்ட 6 துறைமுகங்களையும் எளிதில் உளவு பார்த்து தகவல்களை சேகரிக்க முடியும். இதன் காரணமாகவே, சீனாவின் “ஷி யான் 6” கப்பலை இலங்கையில் நிறுத்த இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் எதிர்ப்புத் தெரிவித்து வந்தன.
எனினும், இலங்கையில் நிலவிய பொருளாதார நெருக்கடிக்கு சீனா உதவியதால், அந்நாட்டுக்கு உதவும் வகையில் ஆராய்ச்சிக் கப்பலை நிலைநிறுத்த அந்நாடு அனுமதி அளித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.