அணு ஆயுத சோதனைகள் தடை ஒப்பந்தத்துக்கான சட்ட அங்கீகாரத்தை ரத்து செய்வதற்கான மசோதா ரஷ்ய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கும் நிலையில், அந்நாடு கண்டம் விட்டு கண்டம் பாயும் அணு ஆயுத ஏவுகணை சோதனையை நடத்தி இருக்கும் தகவல் வெளியாகி இருக்கிறது.
எதிரி நாடுகளை அச்சுறுத்தும் வகையில், உலக நாடுகள் பலவும் அணு ஆயுத சோதனையை நடத்தி வந்தன. குறிப்பாக, அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற வல்லரசு நாடுகள் அணு ஆயுத சோதனை நடத்துவதை பெருமையாகக் கருதின. இதனால், வல்லரசு நாடுகள் தங்கள் மீது படையெடுக்குமோ என்று சிறிய நாடுகள் அச்சத்தில் இருந்தன.
இதையடுத்து, அணு ஆயுத சோதனை செய்வதை தடை செய்ய வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியது. இதைத் தொடர்ந்து, 1996-ம் ஆண்டு அணு ஆயுத சோதனை செய்வதைத் தடை செய்ய ஒப்புக் கொண்டு, அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட 178 நாடுகள் சா்வதேச ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இதன் பிறகு, புதிதாக அணு ஆயுத சோதனை செய்வதை உலக நாடுகள் தவிர்த்து வந்தன.
இதனிடையே, அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அந்நாட்டின் மீது ரஷ்யா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும், உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் தலையிட்டால், அந்நாடுகள் மீதும் அணு ஆயுதத் தாக்குதல் நடத்தப்படும் என்றும் எச்சரித்திருந்தது.
இந்த நிலையில், “புரேவெஸ்ட்னிக்” எனப்படும் அணு ஆயுதத்தை ஏந்திபடி உலகின் எந்த மூலைக்கும் சென்று தாக்குதல் நடத்தக்கூடிய புதிய ஏவுகணையை ரஷ்யா கடந்த 5-ம் தேதி வெற்றிகரமாக பரிசோதித்திருக்கிறது. இதைத் தொடர்ந்து, அணு ஆயுத சோதனைகள் தடை ஒப்பந்தத்துக்கான சட்ட அங்கீகாரத்தை ரத்து செய்வதற்கான மசோதாவையும், ரஷ்ய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி இருக்கிறது.
இதன் பிறகே, ஒரு மாபெரும் அணு ஆயுத சோதனை நிகழ்த்தியதாக ரஷ்யா அறிவித்திருக்கிறது. இதுகுறித்து ரஷ்யா வெளியிட்ட அறிக்கையில், “கண்டம் விட்டு கண்டம் பாயும் அணு ஆயுத ஏவுகணை, ரஷ்யாவின் தூரக் கிழக்கில் உள்ள சோதனை தளத்திலிருந்தும், மற்றொரு அணு ஆயுத ஏவுகணை பேரண்ட்ஸ் கடலில் உள்ள அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலிலிருந்தும் ஏவப்பட்டுச் சோதிக்கப்பட்டது. அணு ஆயுதத் தாக்குதல் நடத்தும் எதிரி நாடுகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், இச்சோதனை நடத்தப்பட்டிருக்கிறது” என்று தெரிவிக்கப்படுகிறது.
இதனால், உக்ரைன் மீது அணு ஆயுதத் தாக்குதல் நடத்துவதற்காக ரஷ்யா இச்சோதனையை நடத்தி இருக்கிறதா என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. எனினும், உக்ரைனைத் தாக்குவதற்கு அணு ஆயுதங்களைப் பயன்படுத்த ரஷ்யா திட்டமிட்டிருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்று அமெரிக்க தெரிவித்திருக்கிறது.