வருங்கால பிரதமர் யார் என்பது தொடர்பாக உத்தரப்பிரதேகத்தில் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சி தொண்டர்கள் வைத்துள்ள பேனரால் இண்டி கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
நாட்டின் அடுத்த பிரதமர் அகிலேஷ் யாதவ் என் சமாஜ்வாடி கட்சி அலுவலகத்தில் அக்கட்சியினர் பேனர் வைத்துள்ளனர். இதற்கு பதிலடி தரும் விதமாக அடுத்த பிரதமர் ராகுல் காந்தி என காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு வெளியே தொண்டர்கள் பேனர் வைத்துள்ளனர்.
2027 ஆம் ஆண்டு உத்தரப்பிரதேசத்தின் முதல்வராக மாநிலத் தலைவர் அஜய் ராய் பதவியேற்பார் என்றும் காங்கிரஸ் கட்சியினர் பேனர் வைத்துள்ளனர்.
பிற்படுத்தப்பட்டோர், தலித்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு ஆதரவாக சமாஜ்வாதி கட்சி போராடுவதாகவும், , எனவே அகிலேஷ் யாதவ் பிரதமராக வேண்டும் என மக்கள் விரும்புவதாக அக்கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் ஃபக்ருல் ஹசன் சந்த், தெரிவித்துள்ளார்.
இதேபோல் ராகுல்காந்தி பிரதமராக வரவேண்டும் என கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் விரும்புவதாகவும், உத்தரப்பிரதேசத்தில் அஜய் ராய் முதல்வராகவும் பதவியேற்பார் என காங்கிரஸ் கட்சி நிர்வாகி நவீன் என்பவர் தெரிவித்துள்ளார்.
இண்டி கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார் என்று அறிவிக்கப்படாத நிலையில், அந்த கூட்டணியில் உள்ள இருகட்சிகள் பிரதமர் தொடர்பாக மோதிக்கொள்வது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது