தமிழக பாஜக மாநில விளையாட்டு பிரிவுத் தலைவர் அமர் பிரசாத் ரெட்டியை தமிழக போலீசார் மேலும் ஒரு வழக்கில் கைது செய்துள்ளனர்.
சென்னை பனையூரில் உள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் இல்லத்தின் முன்பு 100 அடி உயரக் கொடிக் கம்பம் வைக்கப்பட்டிருந்தது. சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அந்த கொடிக் கம்பத்தை அகற்றினர். இதற்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஏற்பட்ட மோதலில் ஜேசிபி வாகனத்தின் கண்ணாடி உடைந்தது.
இந்த விவகாரத்தில், அரசு அதிகாரிகளைப் பணி செய்ய விடாமல் தடுத்தது, அரசு வாகனத்தைச் சேதப்படுத்தியது, வன்முறையைத் தூண்டும் வகையில் செயல்பட்டது என பல்வேறு பிரிவுகளின் கீழ் தமிழக பாஜக மாநில விளையாட்டு பிரிவுத் தலைவர் அமர் பிரசாத் ரெட்டி மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழா குறித்த விவகாரத்தில் தமிழக பாஜக மாநில விளையாட்டு பிரிவுத் தலைவர் அமர் பிரசாத் ரெட்டி மீது கோட்டூர்புரம் காவல்துறையினர் 3 பிரிவுகளில் தற்போது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில், அமர் பிரசாத் ரெட்டி கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமர் பிரசாத் ரெட்டி சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில், வரும் 10-ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.