ஐப்பசி பௌர்ணமி தினத்தையொட்டி, திருவண்ணாமலைக்குச் சிறப்பு இரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு இரயில்வே தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் பௌர்ணமி அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வது வழக்கம். வரும் 28-ம் தேதி ஐப்பசி மாத பவுர்ணமி வருகிறது. அன்றைய தினம் கிரிவலம் மற்றும் அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.
பௌர்ணமி கிரிவலத்தையொட்டி பக்தர்களின் வசதிக்காகச் சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கு வரும் 28 மற்றும் 29 -ம் தேதிகளில் சிறப்பு இரயில் இயக்கப்பட உள்ளது.
அதன்படி, 28 -ம் தேதி மாலை 6 மணிக்குச் சென்னை கடற்கரை இரயில் நிலையத்திலிருந்து புறப்படும் இரயில், நள்ளிரவு 12.05 -க்கு திருவண்ணாமலை சென்றடைகிறது. அதேபோல, திருவண்ணாமலையிலிருந்து 29 -ம் தேதி அதிகாலை 3.45 மணிக்குப் புறப்படும் இரயில் சென்னை கடற்கரைக்கு 9.05 மணிக்குச் சென்றடைகிறது.
இதேபால, விழுப்புரம் கோட்ட அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட முக்கிய நகரங்களிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.