திருச்சியில் நான்கு குறுகிய தூர டீசல் இன்ஜின் இரயில்கள், நவம்பர் 1-ஆம் தேதி முதல் மின்சார இன்ஜின் இரயில்களாக இயக்கப்படும் என்று தெற்கு இரயில்வே தெரிவித்துள்ளது.
தெற்கு இரயில்வேயின் திருச்சி கோட்டத்தில் அனைத்து இரயில் பாதைகளும் மின் மயமாக்கப்பட்டுள்ளன. இதனால் நீண்ட தூர இரயில்கள் அனைத்தும் டீசல் இன்ஜினில் இருந்து மாற்றப்பட்டு, மின்சார இன்ஜினில் இயக்கப்படுகின்றன.
ஆனால் குறைந்த தூர இரயில்கள் பெரும்பாலும் டீசல் இன்ஜினில் இயக்கப்படுகின்றன. இதன் காரணமாக, இரயில்வே நிர்வாகத்திற்கு எரிபொருள் செலவினம் அதிகமாகிறது.
இதனால் குறைந்த தூர இரயில்கள் அனைத்தையும் மின்சார இரயில்களாக மாற்ற திட்டமிட்டுள்ளது. அதன்படி, திருச்சி கோட்டத்தில் முதல் கட்டமாக திருச்சி – பாலக்காடு, திருச்சி – வேளாங்கண்ணி மற்றும் நாகை – வேளாங்கண்ணி, நாகை – காரைக்கால் நான்கு டீசல் இரயில்களை நவம்பர் 1-ஆம் தேதி முதல் மின்சார இன்ஜினில் இயங்கும் இரயில்களாக மாற்ற உள்ளது.
திருச்சி கோட்டத்திலோ, மதுரை கோட்டத்திலோ மின்சார இரயில்கள் பராமரிப்புக்கான ஸ்டேஷன் இல்லை. கேரள மாநிலம் பாலக்காடு மற்றும் திருவனந்தபுரத்தில் தான் மின்சார இரயில்கள் பராமரிப்பு வசதி உள்ளது.
எனவே, திருச்சி மஞ்சள் திடல் பகுதியில் மின்சார இரயில்கள் பராமரிப்பு நிலையம் அமைக்க தெற்கு இரயில்வே திட்டமிட்டுள்ளது.