பா.ஜ.க. ஆட்சியில் 4ஜி சேவை விரிவாக்கம் செய்தபோது எந்தப் பிரச்சனையும் இல்லை. அதேபோல, உலகளவில் 6ஜி தொழில்நுட்பத்தில் இந்தியா தலைமை வகிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
டெல்லி பிரகதி மைதானத்தில் அமைந்திருக்கும் பாரத் மண்டபத்தில் 7-வது ‘இந்திய மொபைல் காங்கிரஸ் மாநாடு 2023’ நடைபெற்றது. ஆசியாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப மாநாடாக பார்க்கப்படும் இம்மாநாட்டை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள 100 கல்வி நிறுவனங்களுக்கு 5ஜி பயன்பாட்டு ஆய்வகங்களை பிரதமர் மோடி வழங்கினார்.
இந்த மாநாடு ‘உலகளாவிய டிஜிட்டல் கண்டுபிடிப்பு’ என்ற கருப்பொருளுடன் அதிநவீன தொழில்நுட்பங்களின் மேம்பாட்டாளர், உற்பத்தியாளர் மற்றும் ஏற்றுமதியாளராக நாட்டின் நிலையை வலுப்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது. 3 நாட்கள் நடைபெறும் இம்மாநாட்டில் சுமார் 1,300-க்கும் மேற்பட்ட வணிகத் தலைவர்கள், 250 கண்காட்சியாளர்கள், 400 புத்தொழில் நிறுவனங்கள், 350 தொழில்துறை தலைவர்கள் உள்பட சுமார் 22 நாடுகளைச் சேர்ந்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கலந்து கொள்கின்றனர்.
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் லிமிடெட் தலைவர் ஆகாஷ் அம்பானி, தொலைத்தொடர்புத் துறையில் தனது நிறுவனம் செய்து வரும் பணிகளை பிரதமரிடம் விளக்கினார். அதேபோல, பார்தி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் தலைவர் சுனில் பார்தி மிட்டலும், பிரதமருடன் கலந்துரையாடினார். முன்னதாக, ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் லிமிடெட் இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் அடிப்படையிலான ஜிகா ஃபைபர் சேவையான ‘ஜியோஸ்பேஸ்ஃபைபர்’ முன்பு இந்தியாவிற்குள் அணுக முடியாத புவியியல் பகுதிகளுக்கு அதிவேக பிராட்பேண்ட் சேவைகளை வழங்குவதை நிரூபித்தது.
நிகழ்ச்சியில் பேசிய மத்திய தகவல் தொடர்பு, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், “பிரதமரின் தொலைநோக்குப் பார்வையானது ஜனநாயகமயமாக்கப்பட்ட தொழில்நுட்பம் மக்களை மையமாகக் கொண்டதாக இருக்க வேண்டும் என்பதுதான். மேலும், சமூகத்தின் வளர்ச்சிக்கு வழி வகுப்பதாகவும் இருக்க வேண்டும். இந்த தொலைநோக்கு பார்வையை இந்திய மொபைல் காங்கிரஸ் மூலம், தொலைத்தொடர்புத் துறையை பிரதமர் மோடி மாற்றி இருக்கிறார்” என்றார்.
பின்னர், மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, “5ஜி சேவையை நாடு முழுவதும் விரிவுபடுத்துவதுடன், 6ஜி தொழில்நுட்பத்தில் தலைமைப் பதவியை நோக்கிய திசையில் நகர்ந்து வருகிறோம். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், பா.ஜ.க. ஆட்சியில் 4ஜி சேவை விரிவாக்கம் செய்தபோது எந்த பிரச்னையும் இல்லை.
உலகளவில் 6ஜி தொழில்நுட்பத்தில் இந்தியா தலைமை வகிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. பிக்சல் மாடல் மொபைல்போன்களை இந்தியாவில் உற்பத்தி செய்ய உள்ளதாக சமீபத்தில் கூகுள் நிறுவனம் அறிவித்திருக்கிறது. சாம்சங் நிறுவனத்தின் ‛போல்ட் 5 மாடல்’ மொபைல் மற்றும் ஆப்பிளின் ஐபோன் 15 மாடல்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மொபைல்போன்கள் உலகம் முழுவதும் பயன்படுத்தப்படுவது பெருமை அளிக்கிறது” என்றார்.