போர் நிறுத்தத்தை மீறி ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் அத்துமீறி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரு இராணுவ வீரர் உட்பட 5 பேர் காயமடைந்தனர்.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நீண்டகாலமாகவே எல்லைப் பிரச்சனை இருந்து வருகிறது. குறிப்பாக, இந்தியாவின் ஒரு பகுதியான ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சில பகுதிகளை பாகிஸ்தான் ஆக்கிரமித்திருக்கிறது. மேலும், ஜம்மு காஷ்மீர் முழுவதையுமே ஆக்கிரமிக்கப் பார்க்கிறது. இதன் காரணமாக, ஜம்மு காஷ்மீர் எல்லையில் அவ்வப்போது அத்துமீறி வருகிறது. அதோடு, இந்தியாவுக்கு எதிராக தீவிரவாதிகளையும் களமிறக்கி விட்டு வருகிறது.
இது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. அவ்வப்போது பாகிஸ்தான் அத்துமீறுவதும், அதற்கு இந்தியா பதிலடி கொடுப்பதுமாக இருந்து வருகிறது. கடைசியாக நடந்த கார்கில் போருக்குப் பிறகு இரு நாடுகளும் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்திருக்கின்றன. இந்த நிலையில்தான், போர் நிறுத்தத்தை மீறி, பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் வீரர்கள் ஜம்மு காஷ்மீர் எல்லையில் இந்திய எல்லையில் தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள்.
அதாவது, ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் அமைந்துள்ள இந்தியா – பாகிஸ்தான் சர்வதேச எல்லையில், நேற்றிரவு திடீரென பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அரினியா, ஆர்.எஸ்.புரா செக்டாரில் உள்ள 5 இந்திய நிலைகளைக் குறிவைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு இந்திய இராணுவ வீரர்களும் பதிலடி கொடுத்தனர். நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கிய துப்பாக்கிச் சண்டை நீண்ட நேரம் நீடித்தது.
இதனால் பொதுமக்கள் வீட்டைப் பூட்டிக்கொண்டு பாதுகாப்பாக வீட்டிற்குள்ளே இருந்தனர். எனினும், பாகிஸ்தான் வீரர்களின் துப்பாக்கிச் சூட்டில் எல்லைப் பாதுகாப்புப்படை வீரர் ஒருவரும், பொதுமக்கள் 4 பேரும் காயமடைந்தனர். சுமார் 3 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது பாகிஸ்தான் வீரர்கள் தாக்குதல் நடத்தியதாகவும், நேற்றிரவு 8 மணியில் இருந்து தொடர்ந்து துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டதாகவும் எல்லையோர மக்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக எல்லைக் காவல்படை வெளியிட்டிருக்கும் எக்ஸ் பதிவில், ”அக்டோபர் 26 இரவு சுமார் 8 மணி அளவில், ஜம்மு பகுதியில் உள்ள இந்திய-பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பி.எஸ்.எஃப். (எல்லைப் பாதுகாப்பு படை) வீரர்கள் உடனடியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதைத்தொடர்ந்து, பாகிஸ்தான் ரேஞ்சர்கள் எங்கள் அருகிலுள்ள பகுதிகளை குறிவைத்து துப்பாக்கிச் சூட்டை நீட்டித்தனர்.
சுமார் 9 மணியளவில், பாகிஸ்தான் ரேஞ்சர்கள் எல்லைப் புறக்காவல் நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளைக் குறிவைத்து இயந்திரத் துப்பாக்கியைக் கொண்டு தாக்குதல் நடத்தினர். இதில் சில குண்டுகள் அர்னியா நகரில் இருக்கும் குடியிருப்புப் பகுதிக்குள் தாக்கியது. இதில் ரஜினி தேவி உட்பட 4 பேருக்கு சிறு காயம் ஏற்பட்டது. மேலும், சுமார் 10.40 மணி அளவில், கனரக இயந்திரத் துப்பாக்கியை பயன்படுத்தி, எங்கள் பகுதியைக் குறிவைத்து தாக்குதல் நடத்தினர்.
இதற்கும் எல்லைப் பாதுகாப்பு படை வீரர்களால் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது. நேற்று இரவு தொடங்கிய துப்பாக்கிச் சூடு இன்று அதிகாலை 2 மணி வரை நீடித்தது. இந்த துப்பாக்கிச் சூட்டில் சி.டி.பசவராஜ் என்கிற வீரருக்கு காயம் ஏற்பட்டது. அவர் உடனடியாக அருகில் இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வேறு யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. எனினும், சேதாரங்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எல்லைப் பாதுகாப்பு படை எப்போதும் விழிப்புடன் இருக்கிறது. எல்லையில் ஊடுருவல் நடவடிக்கைகள் குறித்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.