ஆந்திர மாநிலத்தில் தமிழர்களின் வரலாறு சார்ந்த பகுதிகளில் அகழாய்வு செய்ய, தமிழக தொல்லியல் துறைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.
10-ஆம் நூற்றாண்டில் தமிழகத்தின் பெரும்பகுதியை இராஜராஜ சோழன் ஆட்சி செய்தார். அதே காலகட்டத்தில், தற்போதைய ஆந்திராவை கீழை சாளுக்கியர்களும், கர்நாடகத்தை மேலை சாளுக்கியர்களும் ஆட்சி செய்தனர். பின்னர், அப்பகுதிகளும் சோழர்களின் ஆட்சிக்குள் வந்தன.
இதைத்தொடர்ந்து, சோழர்கள் கீழை சாளுக்கியர்களுடன் மண உறவு வைத்து, ஒரு குறிப்பிட்ட பகுதியைச் சோழர்கள் கீழை சாளுக்கியர்களிடம் ஒப்படைத்தனர்.
அதன் தொடர்ச்சியாக, அங்கு பல்வேறு கோவில்கள் உள்ளிட்ட கட்டுமானங்களையும், நலத்திட்டங்களையும் சோழர்கள் மேற்கொண்டனர். இது தொடர்பான தமிழ் கல்வெட்டுகள், வேங்கி உள்ளிட்ட பகுதிகளில் அதிகம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன. இந்த வரலாற்றுத் தகவல்களைச் சேகரிக்கும் வகையில், தமிழக தொல்லியல் துறை, மத்திய தொல்லியல் துறையிடம் அனுமதி கோரிய நிலையில், மத்திய அரசு தற்போது அனுமதி வழங்கி உள்ளது.
மேலும், கடல்வழி தொடர்பில், கிழக்கு கடற்கரை முழுவதும் ஆதிக்கம் செலுத்திய சோழர்கள், சாளுக்கியர்களின் பாளூர் பகுதியிலும் செல்வாக்கு பெற்றிருந்தனர். அதுமட்டுமின்றி, வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இருந்தே, தமிழர்கள் வெளிநாட்டினருடன் தொடர்பில் இருந்ததற்கான சான்றுகள், பாளூரில் அதிகம் கிடைத்துள்ளன. அந்த பகுதியிலும் அகழாய்வு செய்ய அனுமதி கிடைத்துள்ளது. இதற்கு ஆந்திர அரசும் ஒப்புதல் அளித்துள்ளது.
விரைவில், தமிழக தொல்லியல் துறையும், ஹைதராபாத் மத்திய பல்கலைக் கழகமும் இணைந்து, அப்பகுதிகளில் அகழாய்வு பணிகளைத் தொடங்க உள்ளன.
அகழாய்வு சான்றுகளின் அடிப்படையில், அறிவியல் முறையிலான தரவுகளுடன், தமிழக வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது.
அதேபோல், கர்நாடக மாநிலம் தளக்காடு, கேரள மாநிலம் முசிறி உள்ளிட்ட இடங்களிலும் அகழாய்வு செய்ய, மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளிடம், தமிழக தொல்லியல் துறை அனுமதிகோரி உள்ளது.