பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பற்றி அவதூறாகப் பேசிய, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோராம் ஆகிய 5 மாநில சட்டமன்றங்களின் பதவிக்காலம் டிசம்பர் மாதத்தோடு நிறைவடைகிறது. இதை முன்னிட்டு, மேற்கண்ட 5 மாநிலங்களுக்கும் நவம்பர் மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று, டிசம்பர் மாதம் 3-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
மேற்கண்ட 5 மாநிலங்களில் ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 2 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆகவே, மேற்கண்ட 2 மாநிலங்களிலும் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள காங்கிரஸ் தீவிரம் காட்டி வருகிறது. அதேசமயம், பா.ஜ.க. ஆட்சியைக் கைப்பற்றத் திட்டமிட்டு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
அதேபோல, மத்தியப் பிரதேச மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸும், ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள பா.ஜ.க.வும் தீவரமாக களமிறங்கி இருக்கின்றன. ஆகவே, பா.ஜ.க., காங்கிரஸ் ஆகிய தேசியக் கட்சிகள் மற்றும் மாநிலக் கட்சிகளின் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.
அந்த வகையில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் ராஜஸ்தான் மாநிலத்தில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, தேவ நாராயணன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தவர், அங்கிருந்த நன்கொடை பெட்டியில் பணத்தை போட்டார்.
இதைத் தொடர்ந்து, கடந்த 20-ம் தேதி ராஜஸ்தான் மாநிலத்தில் பிரசாரம் செய்த காங்கிரஸ் பொதுச் செயலாலர் பிரியங்கா காந்தி, பிரதமர் மோடியின் தெய்வ வழிபாடு குறித்து அவதூறகப் பேசியதோடு, நன்கொடைப் பெட்டியில் 21 ரூபாய் நோட்டைப் போட்டதாக கிண்டலாகக் கூறினார். இதுகுறித்து பா.ஜ.க. சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, விளக்கம் கேட்டு பிரியங்கா காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. அந்த நோட்டீஸில் மேற்கண்ட புகாருக்கு வரும் திங்கட்கிழமைக்குள் விளக்கம் அளிக்க வேண்டும். இல்லையெனில், நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது.