காங்கிரஸ் கட்சி ஒரு காலாவதியான செல்போன். 10, 12 வருடங்களுக்கு முன்பு செல்போன் திரைகள் எப்படி உறைந்து கிடந்தனவோ அதேபோலதான் காங்கிரஸ் கட்சியும் செயலிழந்து கிடந்தது என்று பிரதமர் மோடி கூறியிருக்கிறார்.
டெல்லியில் நடந்து 7-வது இந்திய மொபைல் காங்கிரஸ் மாநாட்டை தொடங்கி வைத்து பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், “2014 வெறும் தேதியல்ல, மாற்றம். காங்கிரஸ் கட்சி காலாவதியான செல்போனாக இருந்தது. எத்தனை முறை ஸ்வைப் செய்தாலும் அல்லது பட்டனை அழுத்தினாலும், செயல்படாத உறைந்த ஸ்கீனை கொண்ட கலாவதியான போன் போன்று காங்கிரஸ் ஆட்சி இருந்தது.
ரீஸ்டார்ட் செய்தாலும் அல்லது பேட்டரியை சார்ஜ் செய்தாலும் அல்லது பேட்டரியையே மாற்றினாலும் கூட வேலை செய்யவில்லை. இந்த சூழலில்தான், 2014-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் காலாவதியான செல்போன் போன்ற காங்கிரஸ் அரசாங்கத்தை புறந்தள்ளி, நாட்டை ஆள்வதற்கு எங்களுக்கு வாய்ப்பு அளித்தனர். இதன் பிறகு, மக்கள் காலாவதியான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதை நிறுத்தி விட்டனர்.
மேலும், முன்பு இந்தியா செல்போன்களை இறக்குமதி செய்யும் நாடாக இருந்தது. தற்போது உலகின் 2-வது பெரிய மொபைல் உற்பத்தியாளராக மாறி இருக்கிறது. ஜனநாயகமயமாக்கலின் சக்தியை நாங்கள் நம்புகிறோம். வளர்ச்சியின் பலன் ஒவ்வொரு பிரிவையும், பிராந்தியத்தையும் சென்றடைய வேண்டும். இந்தியாவில் உள்ள வளங்களால் அனைவரும் பயனடைய வேண்டும். அனைவருக்கும் கண்ணியமான வாழ்க்கை இருக்க வேண்டும்.
தொழில்நுட்பத்தின் பலன் அனைவரையும் சென்றடைய வேண்டும். இதற்காக நாங்கள் வேகமாக செயல்பட்டு வருகிறோம். என்னைப் பொறுத்தவரை, இதுவே மிகப்பெரிய சமூக நீதி. சுமார் 2 லட்சம் கிராம பஞ்சாயத்துகளை பிராட்பேண்ட் மூலம் இணைத்துள்ளோம். இதன் மூலம், 10,000 அடல் டிங்கரிங் ஆய்வகங்கள் சுமார் 75 லட்சம் குழந்தைகளை அதிநவீன தொழில்நுட்பத்திற்கு வெளிப்படுத்தி வருகின்றன.
மேலும், செமிகண்டக்டர்களை மேம்படுத்த 80,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பி.எல்.ஐ. திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தொழில்நுட்ப சுற்றுச்சூழலில் வன்பொருள் மற்றும் மென்பொருள் இரண்டின் வெற்றிக்கு, இந்தியாவில் வலுவான குறைக்கடத்தி உற்பத்தித் துறையை உருவாக்குவது முக்கியம். மொபைல் பிராட்பேண்ட் வேகத்தில் இந்தியா முன்னதாக 118-வது இடத்தில் இருந்தது. தற்போது 43-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 5ஜி அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு வருடத்திற்குள் 4 லட்சம் 5ஜி பேஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன” என்றார்.