சென்னை விமான நிலையத்திற்கு, துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து, கடத்தி வரப்பட்ட சுமார் 4.7 கிலோ தங்கக் கட்டிகளை, மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சென்னை விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து, விமானங்களில் கடத்தி வரப்படும் கடத்தல் தங்கக் கட்டிகள், விமான நிலைய ஒப்பந்த ஊழியர்கள் சிலரின் உதவிகளுடன், எந்த சோதனையும் இல்லாமல், வெளியில் கொண்டு சென்று கடத்தல் ஆசாமிகளிடம் ஒப்படைப்பதாகப் புகார் எழுந்துள்ளது.
இந்த நிலையில், துபாயிலிருந்து ஒரு விமானத்தில் கடத்தி வரப்பட்ட தங்கக் கட்டிகளைச் சட்ட விரோதமாக வெளியில் எடுத்துச் செல்வதாக, மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகளுக்கு இரகசியத் தகவல் கிடைத்தது.
இதை அடுத்து மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள், சென்னை சர்வதேச விமான நிலையத்தில், பயணிகளைப் போல் நடித்து, தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது சென்னை சர்வதேச விமான நிலையத்தில், துப்புரவு பணியில் ஒப்பந்த ஊழியராக உள்ள சீனிவாசன் என்பவரைப் பிடித்து சோதனை செய்தனர். அவருடைய உள்ளாடைக்குள், ஒரு கிலோ தங்கக் கட்டிகள் இருந்ததைக் கண்டுபிடித்தனர்.
இதனைத் தொடர்ந்து, சீனிவாசனின் வீட்டிற்குச் சென்று சோதனை செய்ததில், சுமார் 3.7 கிலோ தங்கக் கட்டிகளை மத்திய வருவாய் புலனாய் துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.
விமான நிலையத்தில் ஏற்கனவே ஒப்பந்த ஊழியராக பணியாற்றிய தினகரன், என்பவருக்கும், இந்த கடத்தலில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அதே பகுதியில் வசித்து வரும் தினகரனையும், மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
இருவரிடம் இருந்தும், 2.70 கோடி ரூபாய் மதிப்புடைய, 4.7 கிலோ தங்கக் கட்டிகளைப் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இந்த தங்கக் கட்டிகள் அனைத்தும், துபாயிலிருந்து சென்னைக்கு வந்த விமானங்களில் கடத்தி வரப்பட்ட கடத்தல் தங்கங்கள் என்று தெரிய வந்தது. இதை அடுத்து கைது செய்யப்பட்ட இரண்டு பேரையும், மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.