ஆடவர் பேட்மிட்டன் இரட்டையர் பிரிவில் இந்திய வீரர்கள் தங்க பதக்கம் வென்றுள்ளனர்.
சீனாவின் ஹாங்சோ நகரில் பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீரர்கள் வீராங்கனைகள் பதக்கங்களை குவித்து வருகின்றனர்.
அதில் இன்று ஆண்களுக்கான பேட்மிட்டன் இரட்டையர் SL3-SL4 போட்டி நடைபெற்றது. இதில் இந்திய அணியின் சார்பாக நிதேஷ் குமார் மற்றும் தருண் பங்கேற்றனர்.
இதில் இவர்களுக்கு எதிராக இந்தோனேஷியவை சேர்ந்த ஃப்ரெடி மற்றும் டிவியோகோ விளையாடினர். முதல் செட்டில் இந்தோனேஷியவை தோற்கடிக்க இந்திய வீரர்கள் எவ்வளவு முயற்சி செய்தும் முடியாமல் போனது.
ஆகையால் முதல் செட்டில் இந்தோனேஷி வீரர்கள் 21-9 என்ற செட் கணக்கில் முன்னிலை வகித்தனர். பின்பு இரண்டாவது சுற்றில் வெற்றிப் பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் விளையாடிய இந்திய வீரர்கள் 21-19 என்ற செட் கணக்கில் வெற்றிப் பெற்றனர்.
இரண்டு செட்டிலும் ஆளுக்கு ஒரு முறை வென்றிருந்த நிலையில் மூன்றாவது செட்டை வெல்பவருக்கே தங்க பதக்கம் கிடைக்கும் என்ற நிலையில் இரு அணியும் தீவிரமாக விளையாடி வந்தது.
இதில் மூன்றாவது செட்டில் இந்திய வீரர்கள் நிதேஷ் மற்றும் தருண் சிறப்பாக விளையாடி 22 – 20 என்ற செட் கணக்கில் வெற்றிப் பெற்றனர்.
இதன் மூலம் 2-1 என்ற கணக்கில் இந்திய வீரர்கள் நிதேஷ் மற்றும் தருண் தங்க பதக்கம் வென்றனர். இதற்கு முந்தைய பேட்மிட்டன் தனி பிரிவுப் போட்டியில் நிதேஷ் குமார் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.