தற்போது உலகளவில் நிலவும் ஸ்திரமின்மைக்கு மத்தியில், சீன நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் போர்க் கப்பல்கள் போர்ப்பயிற்சிக்காக பாகிஸ்தானை நோக்கி நகர்கின்றன. இதை இந்தியாவின் P-8I கண்காணிப்பு விமானங்கள் மற்றும் MQ-9B தாக்குதல் ட்ரோன்கள் உள்ளிட்ட இந்திய கடற்படை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றன.
உலகளவில் இந்தியாவின் பொறுப்பான பகுதியாகக் கருதப்படும் இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனக் கடற்படையின் செயல்பாடுகளை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது. இந்த சூழலில், பாரசீக வளைகுடா பகுதியில் சீனக் கடற்படையின் நாசக்காரக் கப்பல், வெடிகுண்டு கப்பல் உள்ளிட்ட 3 போர்க் கப்பல்கள் வலம் வருகின்றன. இவை பாகிஸ்தான் கடற்படையுடன் கடல்சார் பயிற்சிக்காக செல்வதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த 3 போர்க் கப்பல்களும் கடந்த மே மாதம் முதல் 44-வது கடற்கொள்ளை எதிர்ப்பு பாதுகாப்புப் படையின் ஒரு பகுதியாக இருந்து வருகின்றன. தற்போது, ஏடன் வளைகுடாவில் உள்ள 45-வது கடற்கொள்ளை எதிர்ப்புப் படைகளிடம் பொறுப்பை ஒப்படைத்திருக்கின்றன. இந்த 45-வது கடற்கொள்ளை பாதுகாப்புப் படையானது அக்டோபர் மாதம் இந்தியப் பெருங்கடல் பகுதிக்குள் நுழைந்திருக்கிறது. இதன்பிறகு இப்பகுதியில் வலம் வருகிறது.
இஸ்ரேல்-ஹமாஸ் போர் வெடித்த பிறகு, அமெரிக்கப் படையெடுப்புகளை கண்காணிக்கும் வகையில் அப்பகுதிகளை நோக்கி சீன மற்றும் பாகிஸ்தான் போர்க்கப்பல்கள் பாரசீக வளைகுடா பகுதியில் நெருங்கிச் செல்லக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சீனப் போர்க் கப்பல்களுடன் ஒரு நீர்மூழ்கிக் கப்பலும், அதன் ஆதரவுக் கப்பலான சாங் தாவோவும் உள்ளன. இக்கப்பல்கள்தான் இந்திய கடற்படையால் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
எனவே, இந்திய கடற்படை மலாக்கா ஜலசந்தியை சுற்றியுள்ள பகுதிகளில் நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது. மேலும், P-8I நீர்மூழ்கி எதிர்ப்பு போர் விமானங்கள் மற்றும் தாக்குதல் ட்ரோன்களும் பறந்து, பாகிஸ்தான் கடற்படையுடனான சீன போர்க் கப்பல் பயிற்சியை கண்காணிக்க திட்டமிட்டிருக்கிறது. இக்கடற்படை செப்டம்பர் மாதம் மத்தியில் இருந்து சீனாவின் ஆராய்ச்சிக் கப்பலான ஷி யான் 6 கப்பலையும் கண்காணித்தது குறிப்பிடத்தக்கது.