விடுதலையின் அமிர்தப் பெருவிழாவின் நிறைவாக என் மண் என் தேசம் இயக்கத்தின் கீழ் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தவுள்ளார்.
அக்டோபர் 31-ம் தேதி நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்காக 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் 8000-க்கும் மேற்பட்ட அமிர்தக் கலசங்களுடன் தில்லி வருகின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி 31 அக்டோபர் அன்று விஜய் சௌக் கடமைப் பாதையில் என் மண் என் தேசம் விழாவில் உரையாற்றுகிறார். இந்த நிகழ்வு என் மண் என் தேசம் இயக்கத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் அமிர்தக் கலச யாத்திரையின் நிறைவைக் குறிப்பதாக அமையும்.
இதில் 766 மாவட்டங்களில் உள்ள 7000 வட்டாரங்களைச் சேர்ந்த அமிர்தக் கலச யாத்ரிகர்கள் கலந்து கொள்கின்றனர். சுதந்திரத்தின் 75ஆண்டுகளைக் கொண்டாடுவதற்காக 2021 மார்ச் 12 அன்று தொடங்கிய விடுதலையின் அமிர்தப் பெருவிழாவின் இரண்டு ஆண்டு கால இயக்கத்தின் நிறைவையும் இது குறிக்கும். விடுதலையின் அமிர்தப் பெருவிழாவின் கீழ், நாடு முழுவதும் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள், பொதுமக்களின் உற்சாகமான பங்கேற்புடன் ஏற்பாடு செய்யப்பட்டன.
என் மண் என் தேசம் தொடர்பான நிகழ்ச்சியில் தன்னாட்சி அமைப்பான மேரா யுவ பாரத் தொடங்கப்படவுள்ளது. இது இளைஞர்களின் வளர்ச்சியில் கவனம் செலுத்தவும், இளைஞர்களை வளர்ச்சிக்கான ஊக்கச் சக்திகளாக மாற்றவும் உதவும்.
இந்தத் தன்னாட்சி அமைப்பின் நோக்கம் இளைஞர்களை சமூக மாற்ற முகவர்களாகவும், தேசத்தை உருவாக்குபவர்களாகவும் மாற ஊக்குவிப்பதாகும். இது அரசுக்கும், மக்களுக்கும் இடையிலான இணைப்புப் பாலமாக அமையும்.
என் மண் என் தேசம் நிறைவு நிகழ்ச்சிக்காக, 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அமிர்தக் கலச யாத்ரிகர்கள் அக்டோபர் 30 மற்றும் 31ஆகிய தேதிகளில் கடமைப் பாதை விஜய் சௌக்கில் நடைபெறும் இரண்டு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.
இதற்காக சிறப்பு ரயில்கள், பேருந்துகள் மற்றும் உள்ளூர் போக்குவரத்து போன்ற பல்வேறு போக்குவரத்து முறைகள் மூலம் அக்டோபர் 29 ஆம் தேதியன்று தில்லியை அவர்கள் அடைகின்றனர்.
இந்த அமிர்தக் கலச யாத்ரிகர்கள் குர்கானில் உள்ள தஞ்சிரி முகாம் மற்றும் தில்லியில் உள்ள ராதா சோமி சத்சங் பியாஸ் முகாம் ஆகிய இரண்டு முகாம்களில் தங்குவார்கள்.
அக்டோபர் 30-ம்தேதி, அனைத்து மாநிலங்களில் இருந்து சென்றவர்கள் மற்றும் அந்தந்த வட்டார மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் தங்கள் கலசத்திலிருந்து மண்ணை ஒரே பாரதம் உன்னத பாரதத்தின் உணர்வை பிரதிபலிக்கும் வகையில், ஒரு பெரிய அமிர்த கலசத்தில் வைப்பார்கள்.
அமிர்தக் கலச மண், விழாவில் ஒவ்வொரு மாநிலத்தின் பிரபலமான கலை வடிவங்கள் காட்சிப்படுத்தப்படும். காலை, 10:30 மணிக்கு துவங்கும் இந்த நிகழ்ச்சி, மாலை வரை நடைபெறும்.
வரும் 31ம் தேதி மதியம், 12:00 மணி முதல் 2:00 மணி வரை, கலை நிகழ்ச்சிகளுடன், பொது நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. மாலை 4 மணிக்கு, பிரதமர் நரேந்திர மோடி அமிர்தக் கலச யாத்ரிகர்கள் மற்றும் நாட்டு மக்களிடையே உரையாற்றுகிறார்.
இந்தியா சுதந்திரமாக சுவாசிக்கவும் செழிக்கவும் தங்கள் இன்னுயிரை ஈந்த வீரர்களை அப்போது அவர் நினைவு கூறுகிறார்.