திருநள்ளாற்றில் உலகப் புகழ் பெற்ற அருள்மிகு தர்ப்பாரண்யேசுவரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த திருக்கோவில், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோரால் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் 52 -ஆவது சிவத்தலமாக போற்றப்படுகிறது.
இந்த தலத்தில் சனீஸ்வரன், சிவனை வணங்கி பேறு பெற்றார். இதனால், இங்குள்ள நள தீர்த்தத்தில் நீராடி சனீஸ்வரை தரிசனம் செய்து வணங்கினால் ஏழரை சனி உள்ளிட்ட சனி பகவானின் அனைத்து பாதிப்புகளிலும் இருந்து மீண்டு வரலாம் என்பது ஐதீகம்.
இதனால், தமிழகம் மட்டுமல்லாது ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களிலும் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இதனிடையே, திருப்பதி திருமலை திருக்கோவில், திருச்சி திருவரங்கம் ரெங்கநாதர் திருக்கோவில், சமயபுரம் மாரியம்மன் திருக்கோவில், ராமேஸ்வரம் திருக்கோவில் என அனைத்து கோவில்களும் சந்திரகிரகணத்தை யொட்டி கோவில் நடை சாத்தப்படும் என அறிவித்துள்ளது.
இந்த நிலையில், திருநள்ளாற்றில் உள்ள அருள்மிகு சனீஸ்வரன் திருக்கோவிலின் நடை சாத்தப்படாது என்றும், வழக்கம் போல் திறந்திருக்கும் என்றும், எனவே, பக்தர்கள் எப்போதும் போல் வந்து சுவாமி தரிசனம் செய்து, பகவான் அருளை பெறலாம் என திருக்கோவில் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.