பிரதமர் நரேந்திர மோடி மீது நாட்டு மக்கள் முழு நம்பிக்கை வைத்துள்ளனர். ஆகவே, மோடிதான் மீண்டும் பிரதமராக வருவார் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்திருக்கிறார்.
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் சங்கட பிரசாத் சிங்கின் பிறந்தநாள் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இதையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டார்.
நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ராஜ்நாத் சிங், “பிரதமர் நரேந்திர மோடி மீது நாட்டு மக்கள் முழு நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். ஆகவே, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடி பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெற்று மீண்டும் இந்தியாவின் பிரதமராக வருவார்” என்றார்.
சங்கட பிரசாத் சிங், ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கத்தின் (RSS) முன்னாள் மூத்த பிரசாரக் ஆவார். இவர், 1942-ல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்போது ஆர்.எஸ்.எஸ்.ஸுடன் தனது தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார். 1944-ல் பதோஹியின் மடியாஹுன் தாலுகாவில் பிரச்சாரராக நியமிக்கப்பட்டார்.
தொடர்ந்து, ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் பல்வேறு முக்கியப் பதவிகளை வகித்தார். உத்தரப் பிரதேசத்தில் கிசான் யூனியனின் அமைப்பு அமைச்சராகவும், அகில இந்திய கிசான் யூனியனின் தேசிய அமைப்பு அமைச்சராகவும், பாரதிய கிசான் சங்கத்தின் தேசியத் தலைவராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.