அயோத்தியில் ஸ்ரீராம ஜென்மபூமியில் கட்டப்பட்டு வரும் ஸ்ரீராமர் கோவிலில் செதுக்கப்பட்டிருக்கும் சிற்ப வேலைப்பாடுகள் தொடர்பான புகைப்படங்களை ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை வெளியிட்டிருக்கிறது. இந்த சிற்ப வேலைப்பாடுகள் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறது.
அயோத்தியில் இராம ஜென்மபூமியில் ஸ்ரீராமர் கோவில் கட்டுவதற்கு கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். இப்பணிகள் தற்போது நிறைவுக்கட்டத்தை எட்டியுள்ளன. 2024 ஜனவரி மாதம் பக்தர்களின் தரிசனத்துக்காக கோவில் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இக்கோவிலை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இராமர் கோவில் கட்டுமானப் பணிகள் தொடர்பான வீடியோவை ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை வெளியிட்டிருந்தது. இக்காணொளி ஸ்ரீராம பக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில்தான், ஸ்ரீராமர் கோவிலில் செதுக்கப்பட்டிருக்கும் சிற்ப வேலைப்பாடுகள் தொடர்பான புகைப்படங்களை ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை வெளியிட்டிருக்கிறது. இப்புகைப்படங்களை அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் அறக்கட்டளை நிர்வாகம், “ஸ்ரீராம ஜென்மபூமி மந்திரில் உள்ள சிற்பங்கள்” என்று தெரிவித்திருக்கிறது.
இது தொடர்பாகப் பேசிய அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய், “2024 ஜனவரி 22-ம் தேதி கர்ப்பகிரகத்தில் ஸ்ரீராமர் சிலை நிறுவப்படும். சிலையை நிறுவுவதற்காக பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை அழைத்திருக்கிறோம். அவரும் எங்களது கோரிக்கையை ஏற்றுக் கொண்டிருக்கிறார். எனவே, நிச்சயமாக ஜனவரி 22-ம் தேதி ஸ்ரீராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும்” என்றார்.
இதை உறுதிப்படுத்தும் வகையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், “ஜெய் ஸ்ரீராம்! இன்று உணர்ச்சிகள் நிறைந்த நாள். ஸ்ரீராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் அதிகாரிகள் என்னை சந்திக்க எனது இல்லத்திற்கு வந்திருந்தனர். ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி, அயோத்திக்கு வருமாறு என்னை அழைத்தனர். நான் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன். எனது வாழ்நாளில், இந்த வரலாற்று நிகழ்வைக் காண்பது எனது அதிர்ஷ்டம்” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.