சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல்கட்டமாக தேர்தல் நடைபெறும் 20 தொகுதிகளில் போட்டியிடும் 223 வேட்பாளர்களில் 46 பேர் கோடீஸ்வரர்கள் என்பது தெரியவந்திருக்கிறது. மேலும், இவர்களில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிடும் அரச குடும்பத்தைச் சேர்ந்த காத்ராஜ் சிங் என்கிற வேட்பாளருக்கு அதிகபட்சமாக 40 கோடி ரூபாய் சொத்து இருக்கிறது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல்வர் பூபேஷ் பாகேல் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநில சட்டமன்றத்தின் பதவிகாலம் டிசம்பர் மாதத்தோடு நிறைவடைகிறது. இதையடுத்து, இம்மாநிலத்தில் நவம்பர் மாதம் 2 கட்டமாகத் தேர்தல் நடைபெறும் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. அதன்படி, மொத்தமுள்ள 90 சட்டமன்றத் தொகுதிகளில் முதல்கட்டமாக 20 தொகுதிகளுக்கு நவம்பர் 7-ம் தேதி தேர்தல் நடக்கிறது.
இந்த நிலையில், மேற்கண்ட 20 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் தாக்கல் செய்திருக்கும் வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டிருக்கும் தகவல்களை, ஜனநாயக சீர்திருத்தத்துக்கான சங்கம் என்கிற தனியார் அமைப்பு ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கையில், “முதல்கட்டத் தேர்தலில் போட்டியிடும் 223 வேட்பாளர்களில் 46 பேர் கோடீஸ்வரர்கள். மேற்கண்ட 223 வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு 1.34 கோடி ரூபாய்.
இவர்களில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிடும் அரச குடும்பத்தைச் சேர்ந்த காத்ராஜ் சிங்குக்கு அதிகபட்சமாக 40 கோடி ரூபாய் சொத்து இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். அடுத்ததாக, பா.ஜ.க.வைச் சேர்ந்த பாவ்னா போஹ்ராவுக்கு 33 கோடி ரூபாயும், காங்கிரஸ் கட்சியின் ஜதீன் ஜெய்ஸ்வாலுக்கு 16 கோடி ரூபாயும் சொத்து இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்கள்.
அதேபோல, டோங்கர்கர் (எஸ்.சி.) தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடும் ஹேம் குமார் சத்னாமிக்கு வெறும் 8,000 ரூபாயும், அன்டகர் (எஸ்.டி.) தொகுதியில் பாரதிய சக்தி சேத்னா கட்சி சார்பில் போட்டியிடும் நர்ஹர் தியோ கவ்டேவுக்கு வெறும் 10,000 ரூபாயும், குடியரசுக் கட்சி சார்பில் பக்ஷாவின் (கோர்பியா) தொகுதியில் போட்டியிடும் பிரதிமா வாஸ்னிக்குக்கு வெறும் 10,000 ரூபாயும் மட்டுமே இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்கள்.
மேலும், காங்கர் (எஸ்.டி.) தொகுதியில் போட்டியிடும் ஆசாத் ஜனதா கட்சியின் பார்வதி டெட்டா மற்றும் மோலா-மன்பூரில் போட்டியிடும் (எஸ்.டி.) ஜே.சி.சி. (ஜே) வேட்பாளர் நாகேஷ் புரம் ஆகியோரின் சொத்து பூஜ்ஜியம் என்று தெரிவித்துள்ளனர்.
இதுதவிர, மேற்கண்ட 223 வேட்பாளர்களில் 115 பேர் (52 சதவீதம்) 5 முதல் 12-ம் வகுப்பு வரை படித்திருக்கிறார்கள். 97 பேர் (43 சதவீதம்) பட்டதாரிகள். இது தவிர, பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தலா 3 பேர் உட்பட 25 பெண்கள் களம் காண்கின்றனர். மேலும், மொத்த வேட்பாளர்களில் 26 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.