கஜகஸ்தானில் ஏற்பட்ட சுரங்க விபத்தில் 32 பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 14 பேரைக் காணவில்லை. இத்துயர சம்பவத்துக்கு ரஷ்ய அதிபர் புடின் இரங்கல் தெரிவித்திருக்கிறார்.
மத்திய ஆசிய நாடான கஜகஸ்தானின் காரகண்டா பகுதியில் ஏராளமான நிலக்கரிச் சுரங்கங்கள் இருக்கின்றன. இவற்றில் கோஸ்டென்கோ சுரங்கத்தை ஆர்சிலர் மிட்டல் டெம்ரிடாவ் என்கிற தனியார் நிறுவனம் குத்தகை எடுத்திருக்கிறது. இதுதவிர, கஜகஸ்தானில் 8 நிலக்கரி சுரங்கங்கள், 4 இரும்புத் தாது சுரங்கங்களும் இந்நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகின்றன. இவர்கள்தான் உலகின் 2-வது பெரிய இரும்பு உற்பத்தியாளர்களாகவும் விளங்குகின்றனர்.
இந்த நிலையில், கோஸ்டென்கோ நிலக்கரி சுரங்கத்தில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அப்போது சுரங்கத்தில் 250-க்கும் மேற்பட்டோர் பணியில் இருந்தனர். மீத்தேன் வாயு கசிவால் இத்தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த விபத்தில் 32 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 14 பேர் மாயமான நிலையில், அவர்களை தேடி வருகின்றனர். இத்தீவிபத்து குறித்து விசாரணை நடத்த கஜகஸ்தான் அரசு உத்தரவிட்டிருக்கிறது.
இத்துயர சம்பவத்துக்கு கஜகஸ்தான் அதிபர் காசிம் ஜோமார்ட் மற்றும் ரஷிய அதிபர் புதின் ஆகியோர் இரங்கல் தெரிவித்திருக்கிறார்கள். அதேசமயம், இதே சுரங்கத்தில் கடந்த ஆகஸ்டிலும் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 4 பேர் உயிரிழந்தனர். கடந்த ஆண்டு நவம்பரில் இந்நிறுவனத்தின் மற்றொரு சுரங்கத்தில் மீத்தேன் வாயு கசிந்ததில் 5 பேர் பலியாகினர். எனவே, சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்திற்கு எதிராக கஜகஸ்தான் அரசு விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறது. அதுவரை தனியார் நிறுவனத்துடனான ஒப்பந்தங்களை நிறுத்தி வைப்பதாக கஜகஸ்தான் அதிபர் காசிம் ஜோமார்ட் டோகேவ் அறிவித்திருக்கிறார்.