ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக கேரளாவில் வெறுப்பை பரப்புகின்றனர். இதுதான் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு காரணம் என்று மத்திய அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் குற்றம்சாட்டி இருக்கிறார்.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு கேரள மாநிலம் மலப்புரத்தில் ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பின் இளைஞர் அணி சார்பில், காஸாவின் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவாகப் பேரணி நடத்தப்பட்டது. இப்பேரணியின்போது, காணொலிக் காட்சி வாயிலாகப் பேசிய ஹமாஸ் தீவிரவாத அமைப்பின் முன்னாள் தலைவர் காலீத் மஷால், இந்து மற்றும் யூத மதங்களுக்கு எதிராக கருத்துத் தெரிவித்ததோடு, ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக செயல்படும்படி கேட்டுக் கொண்டார்.
இந்த நிலையில், கேரள மாநிலம் களமச்சேரியில் இன்று கிறிஸ்தவ மத பிரார்த்தனைக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. இதுகுறித்து மத்திய அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “காங்கிரஸ் மற்றும் சி.பி.எம். கட்சிகளின் சமாதான அரசியலின் விலையை சமூகத்தின் அப்பாவி மக்களே சுமக்க வேண்டியுள்ளது. வரலாறு அதைத்தான் நமக்கு கற்றுக் கொடுத்திருக்கிறது.
வெட்கக்கேடான அரசியல். காங்கிரஸ், சி.பி.எம்., ஐக்கிய கூட்டணி, இண்டி கட்சிகள் தீவிரவாதிகளான ஹமாஸுக்கு ஆதரவாக வெறுப்பை பரப்பவும், கேரளாவில் ஜிகாத் அமைக்கவும் அழைப்பு விடுக்கின்றன. இது பொறுப்பற்ற முட்டாள்தனமான அரசியல். ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக கேரளாவில் வெறுப்பைப் பரப்புகின்றனர். இதுதான் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு காரணம்” என்று தெரிவித்திருக்கிறார்.
இதனிடையே, செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த மத்திய அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர், “கிறிஸ்தவ சமூகத்தைக் குறிவைத்து நடத்தப்பட்ட இந்த குண்டுவெடிப்பு குறித்து கேள்விப்படுவது மிகவும் வருத்தமாக உள்ளது. ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவரை பேச அனுமதி அளித்து 24 மணி நேரம் கழித்து அதன் விளைவுகளைப் பார்க்கிறோம். கேரள முதல்வரும், அம்மாநில உள்துறை அமைச்சரும் டெல்லியில் அமர்ந்து அரசியல் செய்கிறார்” என்றார்.