இந்தியாவிலிருந்து கடத்திச் செல்லப்பட்ட 105 பழங்கால சிலைகளை கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருப்பி ஒப்படைத்த அமெரிக்கா, தற்போது மீண்டும் 1,414 சிலைகளை திருப்பி ஒப்படைத்திருக்கிறது.
கடந்த மார்ச் மாதம், சர்வதேச புலனாய்வுப் பத்திரிகையாளர்களின் கூட்டமைப்பு (ஐ.சி.ஐ.ஜே.) மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த ஃபைனான்ஸ் அன்கவர்டு ஆகியவை இணைந்து, தமிழகத்தில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் சிலைக் கடத்தல் மன்னன் சுபாஷ் கபூரின் சிலைக் கடத்தலை அம்பலப்படுத்தின.
இதையடுத்து, நியூயார்க்கின் மெட்ரோபொலிட்டன் மியூசியம் ஆஃப் ஆர்ட் (மெட்) நிறுவனத்திற்கு எதிராக நியூயார்க் மாநிலத்தின் உச்ச நீதிமன்றம் மார்ச் 22-ம் தேதி தேடுதல் வாரண்ட் பிறப்பித்தது. அதில், பழங்கால பொருட்களை கைப்பற்ற அதிகாரிகளுக்கு 10 நாட்கள் அவகாசம் அளித்திருந்தது.
இதைத் தொடர்ந்து, மெட் நிறுவனம் மார்ச் 30-ம் தேதி வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட 15 சிலைகளை இந்திய அரசாங்கத்துக்கு திருப்பி அனுப்புவதாகத் தெரிவித்திருந்தது. இதன் பிறகு, ஜூலை 17-ம் தேதி நியூயார்க்கில் உள்ள இந்திய துணைத் தூதரகத்திடம் 105 பழங்காலப் பொருட்கள் அமெரிக்க அதிகாரிகளால் ஒப்படைக்கப்பட்டன.
இந்த நிலையில்தான், தற்போது 1414 பழங்காலப் பொருட்களை அமெரிக்கா இந்தியாவிடம் திருப்பி ஒப்படைத்திருக்கிறது. அதிகாரப்பூர்வ ஆதாரங்களின்படி, இப்பொருட்கள் ஏற்கெனவே நியூயார்க்கில் உள்ள இந்திய துணைத் தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டு விட்டன.
தற்போது, இந்திய தொல்லியல் துறையின் (ஏ.எஸ்.ஐ.) ஒரு குழு, அப்பொருட்களை சரிபார்ப்பதற்காக அமெரிக்காவிற்கு அனுப்பப்படுகிறது. இதன் பிறகு அப்பொருட்களை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பும் செயல்முறைகள் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த 4 ஆண்டுகளில் மட்டும், அமெரிக்காவிலிருந்து சுமார் 400 பழங்காலப் பொருட்களை இந்தியா திரும்பக் கொண்டு வந்திருக்கிறது. கடந்த ஜூலை மாதம் தனது அமெரிக்கப் பயணத்தின்போது இப்பிரச்சனை குறித்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “இந்தியாவிலிருந்து கடத்திக் கொண்டு வரப்பட்ட 100-க்கும் மேற்பட்ட பழங்காலப் பொருட்களை அமெரிக்க அரசாங்கம் திருப்பித் தர முடிவு செய்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், எதிர்காலத்தில் பழங்கால பொருட்கள் கடத்தலை தடுக்கும் நோக்கில் இரு நாடுகளும் கலாசார சொத்துரிமை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. அதேபோல, இருதரப்பு மற்றும் பலதரப்பு வழிகளில், பல்வேறு நாடுகளுடனும் பழங்கால பொருட்களை திரும்பப் பெறுவது தொடர்பான ஒப்பந்தங்களை இந்தியா தொடர்ந்து வருகிறது.