விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 2 லட்சம் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி.
ஆந்திர மாநிலத்தில் விஜயநகர மாவட்டத்திற்கு உள்பட்ட இரயில் நிலையம் ஒன்றில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பயணிகள் ரயில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.
அப்போது, திடீரென அதே தடத்தில் வந்துகொண்டிருந்த பலாசா எக்ஸ்பிரஸ் இரயில், நிறுத்தியிருந்த ரயிலில் மோதியதால் மூன்று பெட்டிகள் தடம் புரண்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த விபத்தில் சிக்கி இதுவரை 19 பேர் பலியானதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், படுகாயமடைந்த பலர் மருத்துமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
இக்கோர விபத்தால் அப்பகுதி முழுக்க பதற்றம் ஏற்பட்டுள்ளது. இரயில் பெட்டிகளுக்குள் சிக்கிய பயணிகளை மீட்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இரயில் விபத்து நடந்துள்ள இடத்திற்கு தேசிய பேரிடர் மீட்புப் படையினர் விரைந்துள்ள நிலையில் சம்பவ இடத்திற்கு 40 ஆம்புலன்ஸ் வாகனங்கள் சென்றுள்ளன.
இந்த நிலையில், இரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் மீட்புப் பணிகள் தொடர்பாக இரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் ஆலோசனை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க மாநில அரசும் ரூ.2 லட்சம் வழங்க மத்திய அரசும் அறிவித்துள்ளது.