இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் அருகே நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த, 37 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
அக்டோபர் 28-ஆம் தேதி இராமேஸ்வரத்தில் இருந்து மீன் பிடிக்க சென்ற மீனவர்களில், இரு படகுகளில் இருந்த 16 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து அன்றிரவு 8:00 மணிக்கு மேலும் மூன்று படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 21 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
ஒரே நாளில் 37 மீனவர்களைக் கைது செய்த இலங்கை கடற்படையினர், 23 பேரை மூன்று படகுகளுடன் மன்னார் கடற்படை முகாமிற்கும், 14 பேரை 2 படகுகளுடன் காங்கேசன்துறை முகாமிற்கும் கொண்டு சென்று காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இவர்களில் 23 பேரை நவம்பர் 9-ஆம் தேதி வரை வவுனியா சிறையிலும், 14 பேரை நவம்பர் 8-ஆம் தேதி வரை யாழ்ப்பாணம் சிறையிலும் அடைக்க மன்னார் ஊர்காவல் துறை நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனை அடுத்து இராமேஸ்வரத்தில் மீனவ சங்கத் தலைவர் சேசுராஜா தலைமையில் கூட்டம் நடந்தது. கைதான 37 மீனவர்கள் மற்றும் அக்டோபர் 14-ஆம் தேதி கைதான 27 மீனவர்கள் என 64 பேரையும், படகுகளையும் விடுவிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவர். 2018-ஆம் ஆண்டு முதல் இலங்கை வசமுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட படகுகளை மீட்க வேண்டும்.
இலங்கையில் மூழ்கி கிடக்கும் படகுகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி நவம்பர் 3-ஆம் தேதி மண்டபத்தில் இரயில் மறியல் மற்றும் நவம்பர் 6-ஆம் தேதி தங்கச்சிமடத்தில் தொடர் உண்ணாவிரதம் நடத்துவது எனத் தீர்மானங்களை நிறைவேற்றினர்.
12 நாட்களுக்குப் பின்பு பணிநிறுத்தத்தைத் திரும்ப பெற்று அக்டோபர் 28-ஆம் தேதி இராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். இந்த நிலையில், மீண்டும் மீனவர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, இன்று முதல் மீண்டும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதால், அவர்களிடம் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.