குஜராத்தில் 5,950 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் வளர்ச்சியைப் பார்த்து உலகமே விவாதிக்கிறது என்று பெருமையுடன் கூறியிருக்கிறார்.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக குஜராத் மாநிலத்திற்குச் சென்றிருக்கிறார். இன்று காலை விமானம் மூலம் அகமதாபாத்தை அடைந்த பிரதமர் மோடி, ஹெலிகாப்டர் மூலம் அம்பாஜிக்கு அருகிலுள்ள சிக்லா கிராமத்திற்குச் சென்றார். அங்கிருந்து கோயில் நகரமான அம்பாஜியை அடைந்தபோது, சாலையின் இருபுறமும் ஆயிரக்கணக்கான மக்கள் அணிவகுத்து பிரதமரை வரவேற்றனர்.
பின்னர், உள்ளூர் தலைவர்கள் மற்றும் கோவில் அர்ச்சகர்கள் பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து, மெஹ்சானாவின் கெராலு தாலுகாவில் உள்ள தபோடா கிராமத்தில் நடந்த பொது நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது, சுமார் 5,950 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களை தொடங்கி வைத்து பேசிய பிரதமர் மோடி, இன்றும், நாளையும் எங்களுக்கு மிகவும் உத்வேகம் அளிக்கின்றன.
சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு ஆங்கிலேயர்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்த கோவிந்த் குருஜியின் நினைவு தினம் இன்று. அதேபோல, நாளை சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாள். கோவிந்த் குரு தனது முழு வாழ்க்கையும் இந்தியாவின் சுதந்திரம் மற்றும் பழங்குடி சமூகத்தின் சேவைக்காக செலவிட்டார். அவரது சேவை மிகவும் வலுவானது.
மேலும், உலகின் மிக உயரமான சிலையை பார்த்தோம். சர்தார் வல்லபாய் படேல் மீது எங்களின் உயர்ந்த பக்தியை வெளிப்படுத்தினோம். வரும் தலைமுறையினர் படேலின் சிலையை பார்ப்பார்கள். நிலவில் சந்திரயான்-3 வெற்றிகரமாக தரையிறங்கியது. இந்தியாவுக்கு உலகம் முழுவதும் பாராட்டு கிடைத்தது.
நாங்கள் ஜி20 மாநாட்டை எப்படி ஏற்பாடு செய்தோம் என்பதை பார்த்து உலகமே வியப்படைகிறது. இந்தியாவின் வளர்ச்சி குறித்து உலகமே விவாதிக்கிறது. அம்பாஜி கோவிலுக்கு செல்லும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில் மகிழ்ச்சி. நேற்று ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பேசினேன். இன்று 6,000 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இத்திட்டங்கள் விவசாயிகளை பலப்படுத்தும். நாட்டின் விரைவான வளர்ச்சிக்கு நிலையான ஆட்சிதான் காரணம்” என்றார்.
பிரதமர் மோடி தொடங்கி வைத்த திட்டங்களில், சரக்கு வழித்தடத்தின் புதிய பாண்டு-நியூ சனந்த் பிரிவும் அடங்கும். தவிர, விராம்கம் – சமக்கியாலி இரயில் பாதை, கடோசன் சாலை- பெச்ராஜி – மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் (எம்.எஸ்.ஐ.எல். சைடிங்) இரயில் திட்டம் ஆகியவற்றை இரட்டிப்பாக்குதல், மெஹ்சானா மற்றும் காந்திநகர் மாவட்டத்தின் விஜாப்பூர் தாலுகா மற்றும் மான்சா தாலுகாவின் பல்வேறு கிராம ஏரிகளை ரீசார்ஜ் செய்வதற்கான திட்டமும் அடங்கும்.
மேலும், மெஹ்சானா மாவட்டத்தில் சபர்மதி ஆற்றில் வலசனா தடுப்பணை, பனஸ்கந்தா, பாலன்பூரில் குடிநீர் வழங்க 2 திட்டங்கள்; தாரோய் அணை அடிப்படையிலான பாலன்பூர் லைஃப்லைன் திட்டம் மற்றும் 80 MLD திறன் கொண்ட நீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவையும் அடங்கும். அதேபோல, மகிசாகர் மாவட்டம் சாந்த்ராம்பூர் தாலுகாவில் பாசன வசதிகளை வழங்கும் திட்டம்; நரோடா – தேகாம் – ஹர்சோல் – தன்சுரா சாலை, சபர்கந்தாவை விரிவுபடுத்துதல் மற்றும் பலப்படுத்துதல் திட்டமும் அடங்கும்.
இது தவிர, காந்திநகர் மாவட்டத்தில் கலோல் நகர்பாலிகா கழிவுநீர் மற்றும் செப்டேஜ் மேலாண்மைக்கான திட்டம்; சித்பூர் (படான்), பலன்பூர் (பனஸ்கந்தா), பயத் (ஆரவல்லி) மற்றும் வத்நகர் ( மெஹ்சானா ) ஆகிய இடங்களில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கான திட்டங்கள் ஆகியவற்றிற்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
தொடர்ந்து, பிரதமர் மோடி நாளை கெவாடியாவுக்குச் செல்கிறார். அங்கு, அவர் சர்தார் வல்லபாய் படேலின் ஒற்றுமை சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்துகிறார். இதைத் தொடர்ந்து, ராஷ்ட்ரிய ஏக்தா திவாஸ் கொண்டாட்டங்கள் நடைபெறும். பிறகு, பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், திறந்தும் வைக்கிறார். இதன் பிறகு, ஆரம்ப் 5.0-ல் உள்ள 98-வது பொது அறக்கட்டளைப் பாடத்தின் பயிற்சி அதிகாரிகளிடம் உரையாற்றுகிறார்.