தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வனப்பகுதியில் தனியாக சுற்றித் திரிந்த ஒற்றை காட்டு யானையை, மர்ம நபர்கள் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள ஒகேனக்கல் வன பகுதியில் 50-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உள்ளன. இங்கு வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தாலும், வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்து வன விலங்குகளை வேட்டையாடும் கும்பல்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டக் கணவாய் வனப்பகுதியில் காட்டுயானை ஒன்று இறந்து கிடப்பதாக வனத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர், அங்குச் சென்று பார்த்த போது மக்னா வகை யானை இறந்து கிடந்துள்ளது. இந்த யானை இறந்து ஏறக்குறைய நான்கு நாட்களுக்கு மேல் இருக்கும் என்று தெரிந்த நிலையில், யானையின் மரணம் தொடர்பாக மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு, சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.
இதுகுறித்து முதற்கட்ட விசாரணையில், யானை வேட்டை கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. மக்னா வகை யானைகள் கூட்டத்துடன் சேராமல் தனியா சுற்றித்திரியும் பண்புக் கொண்டவை, தந்தம் முழுமையாக வளராமல் இருக்கும். இந்த நிலையில், யானையைச் சுட்டுக் கொன்றது யார்? எதற்காக கொன்றார்கள்? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.