தமிழக அமைச்சர்களுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் பாஜக கேவியட் மனுத் தாக்கல் செய்துள்ளதால், திமுக கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது.
திமுக அமைச்சர்கள் பொன்முடி, சாத்தூர் ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர், வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து குவித்ததாகப் புகார் எழுந்தது. ஊழல் தடுப்புச்சட்டத்தின் கீழ் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், வழக்குகளிலிருந்து அவர்கள் 3 பேரும் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் அமைச்சர்கள் பொன்முடி, தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன் ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கைச் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டார்.
உயர் நீதிமன்றத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிராக, சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் சார்பிலும், லஞ்ச ஒழிப்புத்துறை சார்பிலும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இதனிடையே, இந்த விவகாரத்தில் தங்களது தரப்பு வாதத்தைக் கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது எனத் தமிழக பாஜக சார்பில், கேவியட் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை வழக்கறிஞர் நச்சிக்கேத்தா ஜோஷி தாக்கல் செய்துள்ளார்.
தமிழக பாஜகவின் இந்த அதிரடியை எதிர்பார்க்காத திமுக அரண்டுபோய் உள்ளது. இதனால், இந்த வழக்கு மேலும் சூடுபிடித்துள்ளது.