பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் புகுந்து பாஜக நிர்வாகிகள், அரசு அதிகாரிகள், டிஎஸ்பி, போலீசார் என சகல தரப்பினர் மீதும் திமுக அமைச்சர் சிவசங்கரின் ஆதரவாளர்கள் 300 பேர் கொலை வெறி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூரில் ஒரு குவாரிக்கு தலா ரூ. 2 கோடி என 31 கல் குவாரிகளுக்கான ஏலம் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறையில் டெண்டர் பெட்டி வைக்கப்பட்டது. ஆனால், செங்குணம், கல்மாடி, பாடாலுார், திருவளக்குறிச்சி உள்ளிட்ட 21 குவாரிகளை, திமுக எம்.எல்.ஏ., மாவட்ட செயலாளர் ஆகியோர், அதிகாரிகள் துணையோடு பிளாக் செய்துவிட்டனர்.
இதனால், குவாரியை ஏலம் எடுக்க விரும்புபவர்கள், கட்சி நிதியாக 25 முதல் 50 லட்சம் ரூபாய் வரை வசூல் செய்துள்ளனர். இது தவிர, அரசுக்குக்கு கட்ட வேண்டிய ஒப்பந்தப்புள்ளி தொகையை, டி.டி.,யாக எடுத்துக் கொடுக்க வேண்டும் என நிபந்தனை விதித்தனர்.
இந்நிலையில், பாஜக கவுல்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வன், அவரது தம்பி முருகேசன் உள்ளிட்டோர் கல் குவாரி ஏலம் எடுக்க போலீசார் உதவியுடன் பெட்டியில் விண்ணப்பம் போட முயன்றனர்.
இதனால், ஆத்திரமடைந்த போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கரன் உதவியாளர் மகேந்திரன், சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரனின் பி.ஏ. சிவசங்கர் உள்ளிட்டோர் விண்ணப்பத்தைப் பறித்துக் கிழித்தெறிந்தனர். பாஜக நிர்வாகிகளான கலைச்செல்வன், முருகேசன் மற்றும் கனிம வரித்துறை துணை இயக்குநர் ஜெயபால், வருவாய் ஆய்வாளர் குமரி அனந்தன், உதவி புவியியலாளர் இளங்கோவன் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தினர். டி.எஸ்.பி., பழனிசாமியைக் கீழே தள்ளி விட்டனர். அலுவலத்தில் உள்ள கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருட்களை சூறையாடினர்.
பாஜக பிரமுகர்கள் 3 பேரும், கலெக்டர் அலுவலக பார்வையாளர் அறையில் தஞ்சம் புகுந்தனர். ஆனாலும், விடாமல் துரத்திச் சென்று முருகேசனின் பேண்டை உருவிவிட்டு, போலீசார் முன்னிலையில் தாக்கினர். இதைப் படம் பிடித்த வீடியோ, போட்டோ கிராபர், செய்தியாளர்களை சரமாகியாக தாக்கினர். இதில், சத்தியம் தொலைக்காட்சி நிருபர் மாரியப்பனின் செல்போன் பறிக்கப்பட்டது.
உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அதிகாரிகள், பெண் அலுவலர்கள் கதவைச் சாத்திக் கொண்டு பயத்தில் நடுங்கினர். இதனால், கலெக்டர் அலுவலகமே போர்க்களமானது.
திமுகவினரின் இந்த கொலை தாக்குதலுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.