5 ஆயிரம் இரயில் இன்ஜின்களில் கேமராக்கள் பொருத்திக் கண்காணிக்க வேண்டும் என்று அனைத்து மண்டல பொது மேலாளர்களுக்கும், இரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக, இரயில்களில் தீ விபத்து மற்றும் தடம் புரளுதல் போன்ற விபத்துகள் அடிக்கடி நடக்கின்றன. விபத்துகளைத் தவிர்த்து, பாதுகாப்பாக இரயில்களை இயக்கும் வகையில், அனைத்து இரயில்வே மண்டலத்திலும் சிக்னல், பாதை உட்பட பாதுகாப்பு பிரிவுகளில், இரயில்வே வாரியம் ஆய்வு செய்து வருகிறது.
இரயில் நிலைய அதிகாரிகள் அறை, சிக்னல் கட்டுப்பாட்டு அறைகளில், ‘கண்காணிப்பு கேமரா’ பொருத்தி, வீடியோ பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், 5 ஆயிரம் இரயில் இன்ஜின்களில் கேமராக்கள் பொருத்தி கண்காணிக்க வேண்டும் என்று அனைத்து மண்டல பொது மேலாளர்களுக்கும், இரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, இரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ‘தற்போது, 500-க்கும் மேற்பட்ட இரயில் இன்ஜின்களில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. அடுத்த கட்டமாக, 5 ஆயிரம் இரயில் இன்ஜின்களில் கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன’ என்றனர்.
இதுகுறித்து இரயில் ஓட்டுனர்கள் கூறுகையில், ‘இரயில் இன்ஜின்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் நடவடிக்கையை, நாங்கள் எதிர்க்கவில்லை என்றனர்.