மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் உள்ளது. 3 -வது முறையாக பாஜக ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்ய உள்ளது.
பாஜகவை வீழ்த்த காங்கிரஸ், திமுக, திரிணாமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம், லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட 28 கட்சிகள் கூட்டுச் சேர்ந்து இண்டியா கூட்டணி என்ற பெயரில் உருவாக்கப்பட்டது. பாட்னா, பெங்களூர், மும்பை ஆகிய நகரங்களில் இதன் ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது.
இந்த நிலையில், மத்தியப் பிரதேசம் உள்பட 5 மாநிலங்களுக்குச் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து, இண்டியா கூட்டணிக்குள் மோதல் ஏற்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வடி கட்சியை அலட்சியம் செய்து, காங்கிரஸ் தன்னிச்சையாக அனைத்து தொகுதிகளுக்கும் தனது வேட்பாளர்களை அறிவித்தது. இதனால், அகிலேஷ் யாதவ காங்கிரஸ் மீது குற்றம் சாட்டியுள்ளார். இதனால், கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்தியா கூட்டணி தற்போது வலுவாக இல்லை என்பது துரதிர்ஷ்டவசமானது எனத் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரும் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வருமான உமர் அப்துல்லா வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். இதனால், இண்டியா கூட்டணி உடைந்துள்ளது அம்பலத்திற்கு வந்துள்ளது.
இண்டியா கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டின் போது குளறுபடி ஏற்படும் என்றும், எனவே தேசிய ஜனநாயகக் கூட்டணியே 3 -வது முறையாக வெற்றி பெறும் என பாஜக தலைவர்கள் கூறி வந்தது குறிப்பிடத்தக்கது.