மேட்டூர் அருகே காவேரிபுரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் காலை உணவு தயாரிக்கும் சமையல் அறையில் மனிதக் கழிவு பூசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே காவேரிபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கூடம் கடந்த 1950 -ம் ஆண்டு முன்னாள் முதல்வர் காமராஜரால் திறந்து வைக்கப்பட்டது.
இந்தப் பள்ளியைச் சுற்றி மதில் சுவர் கட்டாமல் வெட்டவெளியாக உள்ளதால், பள்ளி விடுமுறை தினங்களில் சமூக விரோதிகள் சிலர் இங்கு வந்து மதுபானம் குடித்துச் செல்வது மற்றும் பல்வேறு சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், இந்த பள்ளிக்கு நேற்று விடுமுறை என்பதால், பள்ளி மாணவர்கள் யாரும் பள்ளி பக்கம் செல்லவில்லை. அதேபோல ஆசிரியர்களும் பள்ளி பக்கம் போகவில்லை.
இந்த நிலையில், முதலமைச்சரின் காலை உணவு தயாரிக்கும் சமையலறை சுவரில் மர்ம நபர்கள் மனிதக்கழிவை பூசிவிட்டுச் சென்றுள்ளனர்.
இன்று காலை சமையலறைக்கு வழக்கம் போல் சென்ற ஊழியர்கள் இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாகப் பள்ளியின் தலைமை ஆசிரியருக்கும், காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். ஆனால், அதிகாரிகள் யாரும் மாலை 3 மணி வரை பள்ளிக்குச் சென்று விசாரணை நடத்தவில்லை.
பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து, வழக்குப் பதிவு செய்த போலீசார், பள்ளியின் சமையலறை சுவரில் மனிதக்கழிவு பூசிவிட்டுச் சென்ற மர்ம நபர்களை வலைவீசித் தேடி வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர், புதுக்கோட்டை மாவட்டம் வேங்கையில், தண்ணீர் தொட்டியில் மலம் கலந்தனர். அதில் இன்னும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. அதேபோல, தர்மபுரி மாவட்டம் அருகே உள்ள ஒரு பள்ளியில் தண்ணீர் தொட்டி அருகே மலம் கலந்த விவகாரத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.
குற்றவாளிகளைப் பிடிக்க முடியாமல் திமுக அரசு திணறி வருவதால், குற்றவாளிகள் தைரியமாகக் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் என எதிர்க்கட்சி தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
தமிழகத்தில், ஏற்கனவே, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு போதிய பாதுகாப்பு இல்லாத நிலையில், தற்போது, பள்ளி குழந்தைகள் படிக்கும் பள்ளிகள் குறி வைக்கப்பட்டு அங்கு மலம் கலப்பது தொடர்கதையாகி வருகிறது.